Tuesday, September 29, 2009

அம்மாவும் ....... சீரியலும்.... அவஸ்த்தைகளும்


இன்று பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு, தொலைக்காட்சித் தொடர்களில் கரைந்து போகின்றது. பொழுதுபோக்கு அம்சம் என்று கூறப்பட்டாலும் அதிலிருக்கும் அவஸ்தைகளும் ஏராளம். பெரும்பாலான தொடர்களில் அழுகைச்சத்தத்தின் கதறலும் தகராறுக்காட்சிகளின் ஒலியும் அவஸ்த்தைகளைத் தருவதாகவே அமைகின்றன.

வீட்டு வேலைகள் சமையல் உட்பட எல்லாவற்றையும் 10.30 மணிக்கு முதல் முடிக்க முயலும் அவசரம். ஏதாவது மளிகைச்சாமான்கள் வாங்கிவைக்காவிட்டால், தாமதமானால் பொசுக்கெண்டு அம்மாவிற்கு வரும் கோபத்தை பார்த்துப் பயந்திருக்கிறன். முக்கியமாக சீரியலில் அன்று நடைபெறும் கதையின் தன்மைக்கேற்ப அவரின் உணர்வுநிலை இருப்பதால் வீட்டிற்கு வரும்போது நைசாக அக்காவிடம் இன்டைக்கு சீரியல்கள் எப்படி எனக் கேட்டு, அம்மா எப்படியிருப்பார் என்ற மனநிலையறிந்தே அம்மாவிடம் கதைப்பேன்.

இது மட்டுமா! அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றுவிட்டால் ' ஒருக்கா போன் போட்டுப்பார் எப்ப மின்சாரம் வருமென்று' எனக் கோபத்தில் கொதிப்பார். அங்குமிங்கும் நடந்து திரிவார். பொறுமையிழந்து மின்சார சபையையும் ஒரு வாங்கு வாங்கிவிடுவார். என்ன கொடுமைசார் இது என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

அன்று எனக்கு அலுவலகத்தில் பதவியுயர்வு வழங்குவதாக அறிவித்தனர். சந்தோசத்தில் அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு சென்றேன். அம்மா வழமைபோல் சீரியலில். நான் சந்தோசத்தில் அம்மாவின் அருகில் சென்றேன். அம்மா அழுதுகொண்டிருந்தார். எனக்கு குழப்பமாகிப் போய்விட்டது. ஏற்கனவே அம்மாவிற்கு பிறசர், என்னவென்று விசாரித்தேன், ஆனால் அவர் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்! எனது சந்தேசமும் போய் ஒருவாறு அம்மாவை தேற்றி என்னவென்று கேட்டேன். ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா! என்ன செய்வன் என்று நினைத்து அழுததாக கூறினார். அவரை தேற்ற பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்வது.

சீரியலின் சம்பவங்களிற்கேற்ப அவர்களது உணர்சிகளின் மாற்றம், அச்சம்பவங்கள் போல தமக்கும் நடந்துவிட்டால் என்ற ஏக்கம், வீட்டில் நடைபெறும் சாதாரண சம்பவங்களை சீரியலுடன் ஒப்பிட்டு அதே கோணத்தில் பார்க்கும் போக்கு, அச்சம்பவங்களையே உதாரணமாக கூறும் தன்மை, நாடகத்தில் சரியாகத்தான் சொல்லப்படுகின்றது என அதேபோல் பிடிவாதம் பிடிப்பது செயற்படுவது மட்டுமல்லாமல் அதைப்போல முடிவெடுக்கும் நிலை, போன்று ஏராளமான அவஸ்த்தைகள் இன்று சீரியல் தந்துள்ள பொழுது போக்கின் பக்கவிளைவுகள்.

சீரியல்களின் விம்பங்களாகிவிட்ட பெரும்பான்மை பெண்களின் சுற்றுவட்டத்தில் பல ஆண்கள் போக்கிடமற்றவர்களாக கடற்கரையிலும் பூங்காக்களிலும் சுண்டல் கடலைகளுடனும் நேரம்போக்கி தாமதாக வீட்டுக்கு வந்தால், சீரியல் பாணியில் இவ்வளவு நேரம் எங்க போனீங்க?? என்று ஆரம்பிக்கும் அவஸ்த்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா?

13 comments:

முல்லைப்பிளவான் said...

நீங்கள் குறிப்பிடுவது மிக சரியான விடயம் தான் இன்று பெண்களை அதுவும் குடும்ப பெண்களை அதிலும் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் வீட்டு வேலைகளை பார்க்கும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களின் மன நிலை மிக மோசாமாக பாதிக்கப்படுகின்றது. பொழுது போக்கு அம்சங்கள் எமது வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் போழுது பொக்கு அம்சம் எப்படியும் தயாரிக்கப்படலாம் என்பதில்லை என்பதனை குறிப்பிட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றுக்கு சமூகப்பொறுப்பு மிக அதிகமாக உள்ளது என்பதனையும் குறிப்பிட்டுதான் ஆகா வேண்டும். பணத்தினை மட்டும் கருத்தில் கொள்ளாது சமூகத்திற்காக தயாரிக்கப்படும் இத்தகை நிகழ்ச்சிகளுக்கு சமூகப்பொறுப்பும் உண்டு என்பதனை கருத்தில் வைத்து மேற்கொள்ள அனைவரும் முன் வரவேண்டும்.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்..சீரியல் ஒரு நாள் பார்க்காவிட்டாலும் தொலைந்தது. பத்து நாட்கள் ஆனாலும் அதே கதை தான். ஆனாலும் ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்கமாட்டார்கள்.முன்பெல்லாம், தொடர்கதை படிப்பதில்லையா..அதுபோல இப்பொழுது சீரியல் என்பார்கள் என் அம்மா...

துளசி கோபால் said...

அதான் பொட்டி இல்லைன்னு யாராவது சில பேர் சுயமாச் சிந்திச்சுருவாங்களோன்னு, பெண்கள் முன்னேற்றத்துக்குன்னு அரசாங்கமே தொலைக் காட்சிப் பொட்டி வேற கொடுக்குதே.

சீரியல் மட்டுமில்லை, எப்பப் பார்த்தாலும் சினிமாப் பாட்டுன்னு தங்தங்குன்னு குதிக்கும் கூட்டத்தை இடைவெளிவிடாமக் காமிச்சுக்கிட்டு.....

இந்த அழகில் இதுகளே எல்லா மொழியிலும் மொழிமாற்றப்பட்டுவேற வந்துக்கிட்டு இருக்கு.

பெண்களுக்குப் பொது அறிவு வளர்ந்துருச்சுய்யா..........வளர்ந்துருச்சு

க.பாலாஜி said...

//ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா! என்ன செய்வன் என்று நினைத்து அழுததாக கூறினார். அவரை தேற்ற பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்வது.//

இது மிக உச்சமான செயல். அறியாமையை விதைப்பதே இன்றைய சீரியல்களின் நோக்கம் என்றே தோன்றுகிறது.

நல்ல இடுகை....

பிரபா said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து எல்லாம் சரியாய் இருக்கா ? என்று பார்த்துட்டு போங்க....

கதியால் said...

சீரியல்..இது இன்று சமூகத்தில் இருக்கின்ற ஒரு நோய். இவை இருப்பதில் தவறில்லை. பார்க்கும் எங்கள் சனம் அதில் ஊறி உச்சக்கட்டமான எல்லைக்கே சென்று விடுகிறார்கள். அவைதான் இப்படியான பதிவுகளுக்கு காரணமாக அமைகின்றன. அதை பொழுது போக்காக பார்த்து அதனை அப்படியே விட்டுவிட்டு போகும் மனப்பாங்கை வளர்க்காத வரை. சீரியல்களும் நீண்டு கொண்டு போகும். பார்த்து பழுதாகும் எம்மவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எடுப்பவர்களின் தவறா? பார்ப்பவர்களின் தவறா?

முல்லைப்பிளவான் said...

சீரியல் எடுப்பவர்களின் தவறா? பார்ப்பவர்களின் தவறா? எடுப்பதனால் தானே பார்கிறார்கள். எடுப்பவர்கள் பட்டப்படிப்புகள் படித்தவர்கள், அதனை அனுமதிப்பவர்களும் பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் இவர்கள் சமூகப்பொறுப்புடன் தமது தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாறா பார்பவர்களை குறை சொல்லி பலன் இல்லை.

குறும்பு குண்டன் said...

பொழுதுபோக்கிற்கான சீரியல் இன்று சமூகத்தின் வியாதியாகிப்போனது என்பது உண்மைதான், இதில் ஒருபக்கம் மட்டும் குறைகூற முடியாது.

முல்லைப்பிளவன் கூறியது போல, சீரியல்களைத் தயாரிப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படுவதில்லை.

அதேவேளை, நாடகங்களை நடிப்பு என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதையே மன்மாதிரியாக எடுத்துக்கொள்வது மக்களின் அறியாமையே என்ற கதியால் மற்றும் பாலாஜி அவர்களின் வாதமும் முற்றுமுழுதான உண்மை.

தயாரிப்புவர்க்கம் தவறான வழிக்கு தூண்டுகிறது, அபிமானிகள் அதைப்பகுத்தறியாமல் தூண்டலின் வழி நடப்பது பேதமை -

நன்றி தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களிற்கு

குறும்பு குண்டன் said...

வணக்கம் அமுதாகிருஷ்ணன் அவர்களே!

சீரியல் பார்ப்பது தப்பல்ல, அதிலேயே லயித்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள்.அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது. இது தவிர்க்கப்படவேண்டும்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

குறும்பு குண்டன் said...

பிரபா

சுட்ட கவிதைக்குள்ளால வந்துட்டமல்ல..........

உங்களுக்கு நன்றி

குறும்பு குண்டன் said...

வணக்கம் துளசி கோபால் அவர்களே!

அது மிகப்பெரிய சேவைங்கோ...! இந்த மகேசன் சேவையை வாழ்த்தாம! தமிழ்நாட்டு மக்களின் ஒரேயொரு பிரச்சினை அந்த பெட்டி இல்லாததுதான், மற்றப்படி அவங்க ரொம்ப நல்லாவே இருக்கிறாங்க அப்பிடின்னு கொடுக்கிறவங்க நினைச்சாங்களோ..............!

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

நிலாமதி said...

நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள். நட்புடன் நிலாமதி

குறும்பு குண்டன் said...

நிலாமதி அவர்களே!

//நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள்//


வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி