
மோசமான நாட்கள்
உக்கிரமடைந்த போர்
வேட்டையில் கலைக்கப்படும்
மிருகத்தைப்போல ஓடுகின்றோம்
தொடர் குண்டுத்தாக்குதல்கள்
இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள்
மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று
காப்பாற்றுவார் யாருமில்லை!
கோழியின் இறகுக்குள் பதுங்கும்
குஞ்சுகள் போல
பிள்ளைகள்;
உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில்
பதுங்குகுழிகள்!
அவையே சவக்குழியாகும் அவலம்!
இறுதியில்
ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை!
நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர்
நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது
நடக்கக்கூட ஜீவனில்லை!
பெற்றெடுத்து தோளில் சுமந்தவள்
கூலிவேலை செய்து
என்னை வளர்த்தெடுத்தவள்!
மொட்டுவிடும் பருவத்தில் பிள்ளைகள்!
திரிசங்கு நிலையில் நான்,
யாருக்கும் வரக்கூடாத
துயரத்தின் உச்சம்!
என்ன செய்ய ஆண்டவா!
பேரப்பிள்ளைகளைக் கொண்டு போ
வாழவேண்டியதுகள்! என்றாள்
கலக்கமின்றி!
பார்வையில் அவளது தெளிவு
பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் ஆதங்கம்
என் கன்னத்தில் இருந்த
கண்ணீரை துடைத்து
கையை பிடித்து! நான் வருவன்! நீ போ என்றாள்!
விடைபெறும் இறுதித்தருணம்
அவள் கண்களில் தீர்க்கமான பார்வை!
அன்னையாக மட்டுமல்ல
தியாகத்தின் மறுவடிவமாகவும்
என் தாய்.....!
நடைபிணமாக வந்தேன்! திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு
தேடுகின்றேன்
அம்மாவை
இன்னும்.................!
9 comments:
தாய்.....எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...ஆனால் இந்த அவலங்கள் இன்னமும் தொடர்கிறதே என்னும் போதுதான் கவலை கூடுகிறது. அம்மா என்றாலே....என்னை அனைத்திலும் தாங்குபவளாகிறாள்...!!!
விழி மூடினால்
நெஞ்சுகனக்கும் நினைவுகள்
பாறாங்கல்லாய் அழுத்துகிறது
பெற்றோர் பிள்ளைகளை,
பிள்ளைகள் பெற்றோரை
சகோதரரை, கணவரை, காதலரை
உறவுகளைத் தேடும் படலம்
இன்னும் தொடர்கிறதே
இந்த அவலம்
தாய் என்பவள் தான் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளைகள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று விரும்புபவள். இறுதியாக வன்னியில் பல சம்பவங்கள் நடந்தது. இதை வாசிக்கும் போது நண்பன் சொன்ன உண்மைக்கதை ஞாபகம் வந்நது.
நெஞ்சை பிழியும் உண்மைச்சம்பவத்தை நினைவுகூர்ந்ததிற்கு நன்றி
பேரப்பிள்ளைகளைக் கொண்டு போ
வாழவேண்டியதுகள்! என்றாள்
கலக்கமின்றி!
பார்வையில் அவளது தெளிவு
பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் ஆதங்கம்
என் கன்னத்தில் இருந்த
கண்ணீரை துடைத்து
கையை பிடித்து! நான் வருவன்! நீ போ என்றாள்!
பார்த்து கேட்டு
அனுபவிச்ச
அனுபவித்து கொண்டிருக்கின்ற வாழ்க்கை
பழகியே போகினும்
பதைபதைக்குது
எழுத்தில படிக்கும் பொழுது
அம்மா!!!!!
அரிதாரம் பல எடுத்து
அர்த்தங்கள் கற்பிக்க
ஆண்டவனால்
அனுப்பபட்ட
அபூர்வ பிறவியவள்
படிக்க மனம் பதறுகிறது.
இப்படி எத்தனை அவலங்கள்.
தாய்ப்பாசம் கவிதை பக்கத்திற்கு வருகைதந்தவர்களுக்கும் கருத்து தெரிவித்தவர்களிற்கும் நன்றி
தாய்பாசம் என்பது என்பதனை அழகாக வடித்துள்ளீர்கள். எங்களின் வாழ்க்கையில் நாங்கள் ஒவ்வொருவரும் பார்த்து கேட்டு நியமாக அனுபவித்தவை உங்களின் வரிகளாக உள்ளன. இதன் மறுவடிவமும் எங்கள் வாழ்க்கையில் உள்ளது அவற்றினையும் வரிகளாக்கினால் நல்லது.
mmm
Post a Comment