சில நாட்களாக எந்த செய்தி இணையத்தைத் திறந்தாலும் நயன்தாரா - பிரபுதேவா காதல், திருமணம் தொடர்பான செய்திகளே முதலிடத்தை பிடித்திருந்தன. இதில் எனக்கு என்ன பிரச்சினை என்று நினைக்கலாம். சத்தியமா ஒண்ணுமேயில்லை. காதல், கலியாணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இன்னொருத்தியைக் காதலிப்பது என்பது குடும்ப பிரச்சினை. இதில நாங்க மண்டையை உடைக்க ஒண்ணுமேயில்லை. ஆனால் இவர்களது காதல் பிரச்சினையில் மாதர்சங்கங்கள் நயன் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் முற்றுகைப் போராட்டம் செய்யப்போவதாக வந்த செய்தியில் தான் எனக்கு நிறைய கேள்விகள் (உட்கார்ந்து யோசிக்கவுமில்லை, ரூம் போட்டு யோசிக்கவுமில்லை) அதுவா வருது.
ஏதோ தேசிய பிரச்சினை போல இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நானும் அதுபற்றி பெரிய ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று நினைத்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். அது எப்படியான காதலாக இருந்துவிட்டுப்போகட்டும். என்னுடைய நோக்கம் எல்லாம் இதனூடாக மாதர்சங்கங்களின் சில செயற்பாடுகளை விளங்கிக்கொள்வதுதான்.
பெண்கள் மேம்பாட்டிற்காகப் பெண்களால் அமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்புக்கள்தான் மாதர்சங்கங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதற்காக குரல் கொடுக்க பெண்கள் முன்வந்துள்ளது நல்ல விடயம், வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தியேட்டர் வரை வந்துள்ள அவர்களின் போராட்ட வடிவம்தான் ஒரு தப்பான உதாரணத்திற்கு முன்னோடியாகப் போகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது.
இருவர்மீதும் சொல்லப்படும் செய்திக்கு, ஏன் நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்ல வேண்டும். ஒருவருக்கு மட்டும் ஏன் தண்டனை. பிரபுதேவாவும்; ஒரு நடிகர்தானே! அவரது படங்களைத் தடை செய்ய போராட முடியாதா? அல்லது அவருக்கெதிராக போராட்டம் செய்ய முடியாதா? இதன் மூலம், ஒரு ஆண் குற்றம் செய்யலாம், பெண்ணுக்கு மட்டும்தான் வரைமுறைகள் என்று! மாதருக்காக குரல் கொடுக்கும் இந்த மாதர்சங்கங்கள் சொல்லுகின்றனவா?? அப்படி வரையறுக்க முடியுமா! இது ஒரு அநீதிக்கெதிரான போராட்டம் என்றால். மீண்டும் அவ்வாறான ஒரு தப்பு நடக்கக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக அமையவேண்டாமா? இதற்கு பெண்ணியம், பெண்நவீனத்துவம் பற்றி பேசும் மாதர்சங்கங்கள் என்ன சொல்லப்போகின்றன?
ஏதோ வீட்டில் அடக்கமாக, அப்பாவியாகவிருந்த பிரபுதேவாவை, நயன்தாரா சொக்குப்பொடி போட்டு வைத்திருப்பது போலவும், வாயில விரலை வைச்சா கடிக்கத்தெரியாத அப்பாவியை விடுவிக்க போராடுவது போலவும் இருக்கிறது இவர்களது போராட்டம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிப் பெண்தான் சிந்திக்க வேண்டும் என்றால், மனைவி மீது அந்த மனிதருக்கு இல்லாத அக்கறை, எங்கோ இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஏன் வரவேண்டும்?? ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னால் சீரழிக்கப்படுகின்றது என ஒரு பெண் சிந்திக்க வேண்டும் என்பதுபோல, தன்னால் இரண்டு பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படுகின்றது என்பதை ஏன் அந்த ஆண் சிந்திக்கக் கூடாது?. மாதர்சங்கங்களின் அடிப்படைக் கோட்பாடுதான் என்ன? நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்லி, உங்கள் போராட்டம் வெற்றி பெற்று குடும்பத்தை இணைத்து வைத்த பின்னா, மீண்டும் ஒரு பெண்ணுடன் போக மாட்டார் என்று என்ன நிச்சயம்? அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், இதே போன்று போராட்டம் செய்வார்களா? நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல எந்தப் பிரச்சினையும் பார்க்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரேயொரு ஆதங்கம்தான் ஏன் இவர்களில் யாரும் பிரபுதேவாவை தப்பு செய்தவராகப் பார்க்கவில்லை?
காலம் காலமாக எமது காலச்சாரம் ஆண்மகனைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தில் மாதவி ஒதுக்கப்பட்டாளே தவிர, அவளைத் தேடிச்சென்ற கோவலன் அல்ல. நடக்கமுடியாத கணவனை விபச்சாரி வீட்டிற்கு சுமந்து சென்று விடுபவள் தான் கற்புக்கரசி என்பதும் எமது இலக்கியங்களில் கற்பிக்கப்பட்ட அற்புதம் (அசிங்கம்). அதே போல் சிவன் தொடங்கி முருகன், கிருஷ்ணர் வரை எந்தக் கடவுள்தான், ஒரு பெண்ணுடன் வாழவேண்டும் என்பதை கற்பித்துக் காட்டியிருக்கின்றது? எல்லோரும் வள்ளி திருமணத்தை கோயில்களில் விமர்சையாக கொண்டாடுகின்றோம், அதன் கருப்பொருள் பற்றிய விளக்கம் தெரியாததா என்ன! ஏன் அந்த மண்ணின் மாண்புமிகு முதல்வரே கால்மாட்டில் மனைவியும் தலைமாட்டில் துணைவியுமாகத்தானே காட்சி தருகிறார். (இப்பவே கண்ணைக்கட்டுதே! என்று அயர்ந்து விடாதீர்கள்)
மாதர்சங்கங்களின் கருத்துப்படி தமிழகத்தில் இதுவரை எந்தப்பெண்ணுக்கும் இப்படி ஒரு பிரச்சினை வந்ததேயில்லை. முதன்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்பது போல களத்தில் இறங்கியுள்ளன. கிராமத்தில் எண்பது சதவீதமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நான் சந்தித்த பெண்களில் பலர், 'மனசில புதைச்சு வைச்சிருக்கிறோமய்யா, என்ன செய்வது பலபேரு இதனால வாழக்கையே இழந்திட்டாங்க, இருந்தாலும் கடைசிகாலத்தில நம்மகிட்டதான் வருவாக' என்று பதிலளிக்கிறார்கள். மாதர்சங்கங்கள் பலமாகத்தானே இருக்கின்றன ஏதாவது செய்யலாமில்லையா? என்று கேட்டால், 'ஆம்பளை என்றால் அப்பிடித்தான் கொஞ்சம் அனுசரித்துப் போ' என்று ஆலோசனைதான் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் வராத அக்கறை, ஏன் இதில் மட்டும்?
தவறான வழிநடத்தல்களிலும், பிழையான கோட்பாடுகளிலும் சில மாதர்சங்கங்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். தமிழ்நாட்டில்; மாதர்சங்கம் என்பது ஒரு பலம் வாய்ந்த அமைப்பு, நியாயமான வழிநடத்தல் நிச்சயமாக 'பெண் மேம்பாடு' என்ற இலக்கை அடைய வைக்கும் அவர்கள் அரசியலுக்கும், அதிகாரத்துக்கும், பணத்திற்கும், புகழ்ச்சிக்கும் விலைபோகாத சந்தர்ப்பத்தில்.
இந்தப் பதிவை செய்துகொண்டிருக்கும் போது இன்றைய தினத்தந்தியில் 'கன்னியாகுமாரி பெண்ணைப் போல சென்னையிலும் இளம்பெண் கணவரின் மறுமணத்திற்கு எதிராக அவரது வீட்டின் முன்னால் பெற்றோருடன் போராட்டத்தில் குதித்தார்' என்ற செய்தி என்னைப்பார்த்து, நயனுக்கெதிராக என்றால் மட்டுமா! எனக் கேட்டது.
கொசுறு:
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா, எனக்குப் பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. என்றாலும் அவரின் இடையழகு படுசூப்பர்......! ம்..................ம் ஓவரா வழிஞ்சிட்டனோ!