Monday, November 23, 2009

உனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்

இலையுதிர் கால வேளை
பளிங்கு போல தெரியும்
நிலாவின் மெல்லிய ஒளியில்
நிலா தரையிலா? என தடுமாற வைத்த
உன் முகத்தை!
யன்னலருகில் நின்று
ரசித்த காலங்கள் பல!

குளிர் காலவேளை
ஒரு சிறிய தீவில்
நெருப்பின் இதமான சூட்டில்
தனிமையில்
உன் அணைப்பின் சுகத்தில்,
இருந்தது எல்லாம் இன்னும்
பசுமையான நினைவுகளாக!

என்றாலும் நீ தற்போது
கொஞ்சம் கொஞ்சமாக
காதலிப்பதை நிறுத்தியதால்
நானும் அவ்வாறே நிறுத்த
முயல்கின்றேன்.
திடீரென நீ மறக்க நினைத்தால்
பின்னர்
என்னை பார்க்க முயற்சிக்காதே!
நானும் உன்னை மறந்திருப்பேன்.

நீ, விருப்பியிருந்ததை
முட்டாள் தனமென நினைக்கலாம்
வாழ்க்கைப்பாதையில்
சூறாவளி கடந்து விட்டதாக நினைக்கலாம்
பசுமையான நினைவுகளை ஆழ்மனதில் புதைத்து
என்னைக் கைவிட தீர்மானித்திருக்கலாம்
அந்த நாளையும், நிமிடத்தையும்
நினைக்கலாம்!
நான் இன்னொரு வாழ்க்கையை நோக்கி
நகர்ந்து விடுவேன் எனவும் கருதலாம்

ஆனால்!
எவ்வளவு நாட்களானாலும்
எத்தனை மணிகள் கடந்தாலும்
இனிமையான காதலால்
நீ எனக்கு விதிக்கப்பட்டவள்
என நினைக்கலாம்!
அன்று உன் மனதின் உந்தலில்
என்னைத் தேடுவாய்!
எனது காதல் எனக்கு சொந்தமானது
என பிரியப்படுவாய்!
அப்போதும் வெறுப்பதற்கும் மறப்பதற்கும்
ஒன்றுமிருக்காது
அப்போதும் எனது காதல் எமது காதலை
புதுப்பிக்கும் அன்பே!
எவ்வளவு காலமானாலும்
விலகமுடியாமல்
உன்னிடத்தில் இருக்கும்
என்காதல்

Monday, November 16, 2009

சாதனை

ஒரு லீற்றர் நீரில்
குளித்து
தமிழக அன்பர்
உலக சாதனையாம்
செய்தித் தாளொன்று
பளிச்சென்று தன்பக்கம்
நிரப்பியிருந்தது
அட.............
இதுவா உலக சாதனை?
இதைத்தானே நாங்கள்
தினமும் செய்து கொண்டிருக்கிறோம்
அகதிமுகாமில்.......!

Sunday, November 1, 2009

காதல் கணக்கு (?)

கள்ளங்கபடமில்லா மௌனத்தில்
கண்ணை பார்த்தேன் அவளை கணக்குப்போட!
அமைதியான பார்வையின் கூர்மையில்
கணக்குப்போட முயன்ற போது
தோற்றுப்போனது எனது கணக்கு
என்னடா கணக்கை தப்பாய் போடுகிறாய்
ஆசிரியர் தலையில் குட்டியது
நினைவிற்கு வந்தது

அவளின் மௌனத்தை கலைத்து
'கணக்கு' பண்ண கணக்குப்போட்டேன்
அவளின் கடைக்கண் பார்வையை
என்மேல் விழுத்தினால் கணக்குப்பண்ணலாம்;
என எண்ணியது மனது
பலன்; கிடைத்தது சில நாட்களில்
அவளின் நிசப்தமான கண்களில்
தென்பட்ட பூரிப்பில் எனது கணக்கு
சரியாயிற்று சந்தோசப்பட்டேன்
வாத்தியாரிடம் சொல்லமுடியாது
இது கல்விக் கணக்கல்ல
காதல் கணக்கு

சலனமற்ற பார்வை
முத்தாய் வாயிலிருந்து வரும்
சில வரிகள்
பேசாமடந்தையாயிருந்தாலும்
அடக்கமான குணம்
அளவான பேச்சு – வெகுவாக கவர்ந்தது
அழகான காதலைக் கொடுத்த
இறைவனுக்க நன்றி சொன்னேன்

வாழ்க்கைப்பந்தத்தில்
அமைதியாக கழிகின்றன பொழுதுகள்
வேலை வீடு மளிகைக்கடை என
வேகமாக ஒடியது வாழ்க்கை

நீண்ட நாட்களின் பின்
எனைக்கண்ட நண்பன்
எப்பிடியிருக்கு வாழ்க்கைக் கணக்கு என்றான்
மௌனமாக அவனைப் பார்த்தேன்
நான் மௌனியானதை கூறமுடியாமல்
மௌனமாக சிரித்து விட்டு நகர்ந்தேன்
எப்படிச்சொல்வது எனது கணக்கு
என்னை மௌனியாக்கிவிட்டதென்று

Friday, October 30, 2009

என்றென்றும் என்காதல்

அன்பே உன்னை
ஆழமாக காதலிக்கிறேன்
அதிகமாக காதலிக்கின்றேன்

உனது பேச்சின் இனிமையையும்
உனது அன்பான வார்த்தைகளையும்
அதனால் ஏற்படும் மலர்ச்சியையும்

நீ மென்மையாக தொடும்போது
ஏற்பட்ட ஸ்பரிசத்தையும்
இதழ்களால் இதயங்களை மௌனமாக்கி
உணர்வுடன் பேசி
பெண்மையை எனக்குள்
கிளர்ந்தெழச் செய்ததையும்

உனது களங்கமற்ற சிரிப்பையும்
அதில் தென்படும்
பளிங்குபோன்ற வெண்மையான அன்பையும்

பனி மலைமேல் மோதுவது போன்று
மலர்ச்சியை விரும்பியேங்கிய எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ ஏற்படுத்திய சந்தோசங்களையும்

காலையில் தூக்கம் கலைத்து
தெம்பை தரும் உனது துயிலெழுப்பலும்
இரவில் தூங்க விடாமல் செய்யும்
உனது காதல் முனகல்களும்

அந்த நாட்களின் ஒவ்வொரு விநாடியையும்
உன் காதலின் மிதப்பில்
இருந்ததை எண்ணி
இன்றுவரை அல்ல என்றென்றும்
என் இதயத்திலிருந்து
உன்னை காதலிப்பேன்.

Tuesday, October 27, 2009

வாழ்க்கைச்சக்கரம்

பிரசவ வலி

இருட்டு உலகத்திலிருந்து
விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம்
கருவறையின் சுகமான வேதனை - தாயக்கு




பிரசவம்

உயிரின் புதிய வரவிற்காக
உயிரைப்பணயம் வைத்து
உயிர்கள் நடத்தும் போராட்டம்




குழந்தை

இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி




சிறுவயது

வண்ணாத்து பூச்சிபோல
வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்காக
கற்றலின் ஆரம்பம்





வாலிபம்

ஆலோசனைகளை அலட்டல்களாக்கி
அசட்டுத்துணிச்சலில்
தனித்து எதையும்
எதிர்கொள்ள துணியும் பருவம்




காதல்

ஓமோன்களின் உந்தலில்
எதிர்பாலினரில் ஏற்படும்
ஒருவகை உணர்வின் ஈர்ப்பு





திருமணம்

சுகமென தோன்றும் அழகான அன்புச்சிறை
சரியாக அமையாவிட்டால் துன்பச்சிறை





தந்தை

பிரசவித்தின் பரிதவிப்பு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
எனும் அனுபவிப்பின் தொடக்கக்காலம்.





தாய்

உதிரத்தை உயிராக்கி - பின்
உதிரத்தை உணவாக்கி உயிர்வளக்கும்
உயர்ந்த தெய்வம்





வயோதிபம்

வாழ்க்கையை மீளஅசைபோட்டு
உலகைவிட்டு புறப்பட தயாராகும்
இறுதிக்காலம்