Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Monday, November 23, 2009

உனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்

இலையுதிர் கால வேளை
பளிங்கு போல தெரியும்
நிலாவின் மெல்லிய ஒளியில்
நிலா தரையிலா? என தடுமாற வைத்த
உன் முகத்தை!
யன்னலருகில் நின்று
ரசித்த காலங்கள் பல!

குளிர் காலவேளை
ஒரு சிறிய தீவில்
நெருப்பின் இதமான சூட்டில்
தனிமையில்
உன் அணைப்பின் சுகத்தில்,
இருந்தது எல்லாம் இன்னும்
பசுமையான நினைவுகளாக!

என்றாலும் நீ தற்போது
கொஞ்சம் கொஞ்சமாக
காதலிப்பதை நிறுத்தியதால்
நானும் அவ்வாறே நிறுத்த
முயல்கின்றேன்.
திடீரென நீ மறக்க நினைத்தால்
பின்னர்
என்னை பார்க்க முயற்சிக்காதே!
நானும் உன்னை மறந்திருப்பேன்.

நீ, விருப்பியிருந்ததை
முட்டாள் தனமென நினைக்கலாம்
வாழ்க்கைப்பாதையில்
சூறாவளி கடந்து விட்டதாக நினைக்கலாம்
பசுமையான நினைவுகளை ஆழ்மனதில் புதைத்து
என்னைக் கைவிட தீர்மானித்திருக்கலாம்
அந்த நாளையும், நிமிடத்தையும்
நினைக்கலாம்!
நான் இன்னொரு வாழ்க்கையை நோக்கி
நகர்ந்து விடுவேன் எனவும் கருதலாம்

ஆனால்!
எவ்வளவு நாட்களானாலும்
எத்தனை மணிகள் கடந்தாலும்
இனிமையான காதலால்
நீ எனக்கு விதிக்கப்பட்டவள்
என நினைக்கலாம்!
அன்று உன் மனதின் உந்தலில்
என்னைத் தேடுவாய்!
எனது காதல் எனக்கு சொந்தமானது
என பிரியப்படுவாய்!
அப்போதும் வெறுப்பதற்கும் மறப்பதற்கும்
ஒன்றுமிருக்காது
அப்போதும் எனது காதல் எமது காதலை
புதுப்பிக்கும் அன்பே!
எவ்வளவு காலமானாலும்
விலகமுடியாமல்
உன்னிடத்தில் இருக்கும்
என்காதல்

Tuesday, October 27, 2009

வாழ்க்கைச்சக்கரம்

பிரசவ வலி

இருட்டு உலகத்திலிருந்து
விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம்
கருவறையின் சுகமான வேதனை - தாயக்கு




பிரசவம்

உயிரின் புதிய வரவிற்காக
உயிரைப்பணயம் வைத்து
உயிர்கள் நடத்தும் போராட்டம்




குழந்தை

இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி




சிறுவயது

வண்ணாத்து பூச்சிபோல
வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்காக
கற்றலின் ஆரம்பம்





வாலிபம்

ஆலோசனைகளை அலட்டல்களாக்கி
அசட்டுத்துணிச்சலில்
தனித்து எதையும்
எதிர்கொள்ள துணியும் பருவம்




காதல்

ஓமோன்களின் உந்தலில்
எதிர்பாலினரில் ஏற்படும்
ஒருவகை உணர்வின் ஈர்ப்பு





திருமணம்

சுகமென தோன்றும் அழகான அன்புச்சிறை
சரியாக அமையாவிட்டால் துன்பச்சிறை





தந்தை

பிரசவித்தின் பரிதவிப்பு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
எனும் அனுபவிப்பின் தொடக்கக்காலம்.





தாய்

உதிரத்தை உயிராக்கி - பின்
உதிரத்தை உணவாக்கி உயிர்வளக்கும்
உயர்ந்த தெய்வம்





வயோதிபம்

வாழ்க்கையை மீளஅசைபோட்டு
உலகைவிட்டு புறப்பட தயாராகும்
இறுதிக்காலம்

Sunday, October 25, 2009

முரண்பாட்டின் வினை(லை)!

கார்மேகம் சூழ்ந்து வர
கானமயில் ஆடிமகிழ
கார்குழலாள்
கடைத்தெருவில் நடைபவனிவந்தாள்.

மழைமேகம் இசைத்திட
மழைத்துளிகள் முத்தமிட்டது
மாந்தர் குடைவிரிக்க
மங்கையவள் மழையுடன் உறவாட
மழைத்துளி முகம் நனைக்க
மலர்ச்சியடைந்தது முகம்!
மலர்பாதம் மண்ணில் வைத்து
மங்கையவள்
மயில்போல் துள்ளிவிளையாடினாள்.

நங்கையவள் நளினம் பார்த்து
நானும் ரசித்து நின்றேன்
நான் நின்ற இடத்தில்
நட்டிருந்த கல் தடக்கி
நங்கையவள் நடைதளர்ந்தாள்

என்னவோ எனப்பதைத்து
எட்டிச்சென்று கைகொடுக்க
எழும்பினாள் நாணத்துடன்
எழும்பியவளின் முகம்பார்த்தேன்
என்மனமும் என்னிடமில்லை
எப்படியென்று இன்னும் புரியவில்லை.

எப்போதும் அவள் நினைப்பில்
என்னுடன் என்னவள் என
ஏங்கியிருந்த காலமெல்லாம்
எண்ணி நினைத்து
எப்போதும் மகிழ்வேன்
எல்லாக்கருத்தும்
எம்முள்ளே இணங்கிப்போக
என்னுடைய நாத்தீக கொள்கையையும்
எடுத்தியம்பினேன் எதிர்பார்ப்புடன்

ஒன்றில் மட்டும் ஒத்துப்போகவில்லை
ஒத்துப்போக முயன்றோம்
ஒத்துப்போக வேண்டுமெனில்
ஒருவர் கொள்கையை ஒருவர் விடவேண்டும்
ஒத்துப்போக முடியவில்லை – அதனால்
ஒத்துப்போய் பிரிந்து விட்டோம்
ஒத்துப்போகாத தத்துவங்களைப்போல

அவரவர் வாழ்க்கையில் சுதந்திரமாக
ஆழ்மனத்தில் காதல் வலிகள்
அம்மா பெண்பார்த்தாள்
ஆம் என்று தலையாட்டினேன்
நினைத்தது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நினைத்து சந்தோசப்படு - என
எனக்கு நானே சமாதான தூதுவரானேன்

அமைதியாக ஓரிடத்தில்
அன்பர்கள் ஒன்றினைந்து
அமைதியான திருமண ஏற்பாடு
அவளும் வந்தாள்
அதிர்ச்சியுடன் நான் விழிக்க
அம்மா சொன்னாள் பெண்ணின் அக்காவென்று
அறைந்தது போலிருந்தது
அண்டமே சுழன்றது
ஆண்டவா! என்றேன்
என்னையறியாமல்

காப்பிடம்

காப்பகம்

இயந்திர வாழ்க்கையில்
பொருளாதார பூச்சிகளாக
சுருண்டுபோன உறவுகளிடம்
அன்புக்கு ஏங்கும்
குழந்தைகளும்
முதியோரும்
என்னிடத்தில்!


காப்பகம் - மகன்

சிறுவயதில் நான்
முதுவயதில் நீ
நேரமில்லை அப்போது உனக்கு
இப்போது எனக்கு
காலச்சுழற்சியை பார்த்தாயா?


காப்பகம் - தாய்

தோளில் சுமந்து
பாலூட்டி - திசைகாட்டியாய்
வழிநடத்தியவள்
வழிமேல் விழிவைத்து
வரவுக்காய் காத்திருக்கின்றாள்
காப்பகத்தில்!

Monday, October 19, 2009

முத்தமிட ஆசை ..........!

நீ அங்கே நான் இங்கே
யார் எம்மை சேர்த்துவைப்பார்கள்
யார் யாரோ சேர்ந்து நின்று
எம் இருவரையும் பிரித்துவிட்டார்களே
இதனால் யாருக்கென்ன லாபம் என்று
தினம் தினம் விடைதேடுகின்றேன்
இன்னும் கிடைக்கவில்லையே விடை எனக்கு
உன்னை விட்டு வந்த நாள் தொடக்கம்
என் கண்மணிகள் நிம்மதியாய் உறங்கவில்லை
உன்முகத்தின் அழகும்
நீ இறுதியாய் சிந்திய சிவப்பு நிற கண்ணீரும்
இன்னும் என் நெஞ்சில் நெருப்பாய் எரிகின்றது
இதை அணைப்பதற்கு யாருமில்லை இங்கெனக்கு!
உன்னிடமிருந்து என்னை பிரித்தவனை
எப்படி நான் எதிர்கொள்வேன் என்று
இங்கு தினம் தினம் எனக்குள்ளே திட்டமிடுகின்றேன்
உன்னை விட்டு நான் இங்கு வந்ததனால்
என்மீது உனக்கு கோபம் அதிகம்
அது எனக்கு நன்றாகத் தெரியும்
அந்த அரக்கனோடு சேர்ந்து வாழ
என்னால் முடியாது அது உனக்கு நன்றாக புரியும்
ஒன்றை மட்டும் சொல்கின்றேன்
விரைவில் நாம் இருவரும் ஒன்றாய் சேர்வோம்
அப்போது உன்னை அணைத்து முத்தமிட முடியாவிட்டாலும்
உன்மேனியெங்கும் முத்தம் தந்து
உன்மீது படுத்துறங்கும் காலத்திற்காய்
காத்துநிற்கிறேன்
நான் பிறந்த தாயக மண்ணே...!

Friday, October 16, 2009

தீபாவளி நாளில்.....................!

முற்றத்து மல்லிகை தன் இதழ்களால் புன்முறுவல் பூக்க
நறுமணம் பரவுகின்றது - என் இல்லமெல்லாம்
தீபத்திருநாளாம் என்பதனால்
முழுகிய கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட
என் மனையாள் இல்லமெல்லாம்
சாம்பிராணி காட்டுகின்றாள் !!!
மூத்தவளோ முழுகியிட்டு வாங்கோப்பா
கோணேசர் கோயிலுக்கு போவம் என்றாள்
இளையவனே பட்டாசு வாங்கித்தா வென்று பம்பரமாய் சுற்றுகின்றான் !!!
என் அம்மாவோ
கௌரிகாப்பொடுக்க போகவேணும்
காளியாச்சி கோயிலுக்கு கார்பிடிச்சு வாவென்றார்!!
அப்பா மட்டும் வழமைபோல்
சாப்பாடு போடெனக்கு
வயலுக்கு போகவெணும்
வரப்புவேலை கிடக்கென்றார்;!!!
என்ன செய்வதென்று எனக்கொன்றும் புரியவில்லை
கார் பிடிக்க போவமென்று கால் சட்டை போட்ட போது
என் கால்கள் நனைகின்றது !!!
என்னவென்று திகைத்தெழுந்தேன்
மழைநீர் வந்தது கூடாரத்துக்குள்
மண்வெட்டியை எடுத்தேன்
அணை போட!!!
பக்கத்துக் கூடாரங்களிலும்
இதே சலசலப்பு
முட்கம்பியடித்த எம் அகதிமுகாமெல்லாம்!!!

Thursday, October 15, 2009

ஆராதனாவும் முப்பது நாட்களும்

மிகவேகமாக கடந்தது ஆராதனாவுடன் முப்பது நாட்கள். ஆக்கங்களைப் பதிவு செய்து புதிய நண்பர்கள், அறியாத மனிதர்களுடன் கருத்துப்பரிமாறும், கருத்து மோதல் செய்யும் வித்தியாசமான அனுபவம். ஒரு வேறுபட்ட புதிய உலகம்.நவீன தொழில்நுட்ப வளாச்சி தந்த புதிய ஊடகப்பதிவு. சுய சிந்தனைகள், கருத்துக்கள்,உண்மைகள், உணர்வுகளை பகிரும், பட்டைதீட்டும், அறிந்து கொள்ளும் அழகான தளம் வலைப்பூ. பதிவுகளை செய்யும் போது சுகமான பிரசவத்தின் பதட்டம், பின்னூட்டங்கள் வரும்போது சந்தோசம் போன்றன வலைப்பூ தந்த அனுபவங்கள்.

கவிதை, கட்டுரை, விவாதங்கள் என மனதில் உதித்தவற்றை கிறுக்க, அதற்கு கருத்துக்கூறும்போது ஏற்படும் ஒரு புத்துணர்ச்சி உத்வேகத்தை தர, தேடலும் இணைந்து இப்புதிய உலகத்தில் நடைபயின்று முப்பது நாட்கள் இன்றுடன்.

தொடர்ந்து வந்தும் நயமான கருத்துக்களைப் பின்னூட்டியும் ஆக்கம் தரும் நண்பர்களான கதியால், முல்லைப்பிளவன்,கவி, பொன்னி , பவி, க.பாலாஜி, வெண்ணிற இரவுகள், புலவன் புலிகேசி, தேவன்மாயம், வசந்குமார், சூரியா கண்ணன், நாமக்கல் சிபி, வால்பையன், அத்திவெட்டி பாரதி, ரமேஸ், அருள், அமுதா கிருஷ்ணன், துளசிகோபால், பிரபா, நிலாமதி, வெங்கட், சந்திரவதனா, ரங்குடு, பின்னோக்கி, உத்தம புத்திரன், ஜிவிதன், சிங்கக்குட்டி, துபாய்ராஜா, பிரியமுடன் வசந், எலட், வனம் இராஜராஜன்,விஜய்,செந்தழல் ரவி, அருள், கோகுல், சந்ரு, ரப் மற்றும் பெயரில்லாப் பின்னூட்டுனர்களுக்கும் தமிழிஸ், உலவு, தமிழ்மணம், தமிழ் திரட்டி தளங்களினூடாக வாக்களித்து ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் உங்கள் தொடர் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கும் ஆராதனாவின் வலைப்பூக்கள் பதிவாளர்கள்.

Friday, October 9, 2009

முதலிரவு


மனதில் புத்துணர்ச்சி
இனம்புரியா சந்தோசம்
அறையினுள் நுழையும் போது
கட்டிலின் மூலையில்
பவ்யமாக இருந்த என் அழகுப்பதுமை
எத்தனை நாள் காத்திருப்பு
இந்த ஒரு கணத்திற்காக!
பூரிப்பில் அருகில் சென்றமர்ந்தேன்
பரபரப்பு
சற்று நேரம் ஆசையுடன்
அழகை ரசித்தேன்
மெதுவாக கையால் தடவினேன்
பஞ்சுபோல் மெதுமையாக
சில்லிட்ட உரோமங்கள்
உந்திவிட்ட ஆவலில்
மேற்பாகம் தொட்டு மெதுவாக விலக்க
செக்கிச் சிவந்து
நெளிந்த உடற்பாகம்
மங்கிய அறை ஒளியில்
மின்மினியாய் ஒளிர்ந்தது
ஓவ்வொன்றாக விலக்கி
அழகின் புதிய பரிமாணத்தை
அங்குலம் அங்குலமாக
ரசித்தேன்
அழகிலே மயங்கி
மார்பில் சேர்த்தணைத்து மெதுவாக
என்னை முழுமையாக மறைத்தேன்
மார்கழிக் குளிரில் என்மேல் பரவி
சுகந்தத்தையும் இதமான சூட்டையும்
தந்தது எனது புதிய கம்பளிப்போர்வை

Thursday, October 8, 2009

முதல்...........!


பூவிதழால் வருடுவது போன்ற
மென்மை
சிலிர்த்தது போலிருந்தது!
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை
உணர்ச்சி நரம்புகளில் மின்சாரம் ஊடுருவிச் சென்றதைப்போல
ஒரு வகை உணர்வுப்பிரவாகம்!
மகுடிக்கு மயங்கிய பாம்புபோல
உடலும் மனமும் கட்டுண்டு கிடக்க
புதுவகை உணர்வின் இன்பத்தேடலில்
விலக முயலாமல் உடல் தளர்வடைய
என்னை அறியாது
கண்களும் சொருக.....
தயவுசெய்து கேட்காதே
இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கின்றது – உடல்
படபடக்கின்றது - இதயம்
உணர்வுகள் உந்துகின்றன
ம் .... ம்
புரியவில்லை!
சொல்ல முடியவில்லை!
உன் முதல் முத்தம் எப்படியிருந்ததென்று!