
இன்று பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு, தொலைக்காட்சித் தொடர்களில் கரைந்து போகின்றது. பொழுதுபோக்கு அம்சம் என்று கூறப்பட்டாலும் அதிலிருக்கும் அவஸ்தைகளும் ஏராளம். பெரும்பாலான தொடர்களில் அழுகைச்சத்தத்தின் கதறலும் தகராறுக்காட்சிகளின் ஒலியும் அவஸ்த்தைகளைத் தருவதாகவே அமைகின்றன.
வீட்டு வேலைகள் சமையல் உட்பட எல்லாவற்றையும் 10.30 மணிக்கு முதல் முடிக்க முயலும் அவசரம். ஏதாவது மளிகைச்சாமான்கள் வாங்கிவைக்காவிட்டால், தாமதமானால் பொசுக்கெண்டு அம்மாவிற்கு வரும் கோபத்தை பார்த்துப் பயந்திருக்கிறன். முக்கியமாக சீரியலில் அன்று நடைபெறும் கதையின் தன்மைக்கேற்ப அவரின் உணர்வுநிலை இருப்பதால் வீட்டிற்கு வரும்போது நைசாக அக்காவிடம் இன்டைக்கு சீரியல்கள் எப்படி எனக் கேட்டு, அம்மா எப்படியிருப்பார் என்ற மனநிலையறிந்தே அம்மாவிடம் கதைப்பேன்.
இது மட்டுமா! அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றுவிட்டால் ' ஒருக்கா போன் போட்டுப்பார் எப்ப மின்சாரம் வருமென்று' எனக் கோபத்தில் கொதிப்பார். அங்குமிங்கும் நடந்து திரிவார். பொறுமையிழந்து மின்சார சபையையும் ஒரு வாங்கு வாங்கிவிடுவார். என்ன கொடுமைசார் இது என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.
அன்று எனக்கு அலுவலகத்தில் பதவியுயர்வு வழங்குவதாக அறிவித்தனர். சந்தோசத்தில் அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு சென்றேன். அம்மா வழமைபோல் சீரியலில். நான் சந்தோசத்தில் அம்மாவின் அருகில் சென்றேன். அம்மா அழுதுகொண்டிருந்தார். எனக்கு குழப்பமாகிப் போய்விட்டது. ஏற்கனவே அம்மாவிற்கு பிறசர், என்னவென்று விசாரித்தேன், ஆனால் அவர் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்! எனது சந்தேசமும் போய் ஒருவாறு அம்மாவை தேற்றி என்னவென்று கேட்டேன். ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா! என்ன செய்வன் என்று நினைத்து அழுததாக கூறினார். அவரை தேற்ற பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்வது.
சீரியலின் சம்பவங்களிற்கேற்ப அவர்களது உணர்சிகளின் மாற்றம், அச்சம்பவங்கள் போல தமக்கும் நடந்துவிட்டால் என்ற ஏக்கம், வீட்டில் நடைபெறும் சாதாரண சம்பவங்களை சீரியலுடன் ஒப்பிட்டு அதே கோணத்தில் பார்க்கும் போக்கு, அச்சம்பவங்களையே உதாரணமாக கூறும் தன்மை, நாடகத்தில் சரியாகத்தான் சொல்லப்படுகின்றது என அதேபோல் பிடிவாதம் பிடிப்பது செயற்படுவது மட்டுமல்லாமல் அதைப்போல முடிவெடுக்கும் நிலை, போன்று ஏராளமான அவஸ்த்தைகள் இன்று சீரியல் தந்துள்ள பொழுது போக்கின் பக்கவிளைவுகள்.
சீரியல்களின் விம்பங்களாகிவிட்ட பெரும்பான்மை பெண்களின் சுற்றுவட்டத்தில் பல ஆண்கள் போக்கிடமற்றவர்களாக கடற்கரையிலும் பூங்காக்களிலும் சுண்டல் கடலைகளுடனும் நேரம்போக்கி தாமதாக வீட்டுக்கு வந்தால், சீரியல் பாணியில் இவ்வளவு நேரம் எங்க போனீங்க?? என்று ஆரம்பிக்கும் அவஸ்த்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா?