Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, October 20, 2009

முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ஒரு பகிரங்க வேண்டுகோள்...!

அதிகாலை வேளை, நகரத்து சலசலப்பு சந்தடியால் தூக்கத்திலிருந்து விழித்தேன். மனைவி தலைவலி மருந்து வாங்கிவரும்படி கேட்டாள். மருந்துக்கடையை தேடி, தமிழ் நாட்டின் தலைநகரின் சாலையோரம் நடந்து கொண்டிருந்தேன். புதிய இடம், புதிய மனிதர்கள், என்றாலும் என் மூதாதையர் வாழ்ந்த தமிழ்நாடு என்பதால் புதிய இடத்திலிருக்கும் உணர்வு ஏற்படவில்லை.


மருந்துக்கடையை தேடிய நான் கடைசியாக 'மெடிக்கல்ஸ் சாப்'பைச் சென்றடைந்தேன். கடையில் விற்பனையாளர் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடியதைக் கேட்க வியப்பாக இருந்தது. நான் வாங்கவேண்டிய மருந்துக்கு கொடுக்க வேண்டிய பணம் பத்து ரூபா. என்னிடமிருந்ததோ நூறு ரூபா தாள்கள், எனவே நூறு ரூபா தாளை மாற்ற முடியுமா? என விற்பனையாளரிடம் கேட்டேன். என்னை விழித்துப் பார்த்த அவர் 'நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியல்லை சார் ' என்ன 'லாங்குவிச்' பேசுறிங்க? தமிழ் தெரியாதா? என்றார், எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என்றாலும் பொறுமையாக ஆங்கிலத்தில் Do you have 100 rupees change? என கேட்டேன். எனைப்பார்த்து ஏளனமாக சிரித்த அவர் 'கன்றட் றுப்பீஸ் சேஞ்ச் என (f)பெஸ்டே தமிழ்ல கேட்டிருக்கலாமே! சார்' என்றார். அந்நிய மொழியின் ஊடுருவலின் தாக்கம் எந்தளவு தமிழை சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்கின்றது என்பதை நடைமுறையிலுணர்ந்தேன்.

'வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்ற பெருமைகொண்ட நாடு. மனிதர்களை வாழவைப்பது மனிதாபிமானம். ஆனால் தனது மொழியின் சுவையை, அதன் அழகை மறந்து, (கேவலமாக எண்ணி) மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பது போல வெள்ளையனிடமிருந்து வந்த ஆங்கிலத்தையும் கலந்து பேசுவது ஏன்? ஏன் மொழிப்பற்று விட்டுப்போயிற்று?

நான் ஆங்கில மொழியை எதிர்ப்பவனல்ல. நவீன தொழில்நுட்பம், வியாபாரம், சர்வதேச தொடர்பாடல், மேற்கல்வி போன்று பல விடயங்களுக்கு ஆங்கிலம் அவசியம். ஆனால் எமது மொழி மக்களிடம் எம்மொழியில் மட்டும் பேச வேண்டும். எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் மட்டுமே பேச வேண்டும். எமது மொழியை அழியவிடக்கூடாது என்பதே எனது கோட்பாடு. எதில் கலப்படம் வந்தாலும் அழிவு அழிவு தான். அப்படியாயின் மொழி அழிந்து விடுமா? என எனக்குள் ஒரு கேள்வியெழுந்தது.

பலவேறு நாடுகளில் மொழியை பாதுகாத்து, உலக விடயங்களையும் அறிவையும் உள்வாங்கி தமது மொழி அழியவிடாமலிருக்கும் மொழிப்பற்றை பல நாட்டு மக்களிடம் பார்த்துள்ளேன். உலகமயமாக்கலுக்குள்ளும் அடிபட்டுப்போகாமல் தங்களது தனித்துவத்தை போற்றி மொழியை பாதுகாத்து வளர்க்கும் அக்கறையுடன் பலவேறு மொழி பேசும் மக்கள் மத்தியில் செம்மொழி மைந்தர்களிற்கு ஏன் இந்த அலட்சியம்?.

மொழி அழிவின் வேகத்தை எடுத்தியம்பி நிற்பவை வியாபாரநிலையங்களின் 'தமிங்கில' பெயர்ப்பலகைகள். விற்பனை நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் மொழி தெரியாதவர்கள் படிப்பார்கள், ஆனால் நல்ல தமிழ்ப்பெயர்கள் இருக்கும் போது, ஆங்கில சொல்லின் தமிழ் உச்சரிப்பில், புதிய தமிழற்ற சொற்களை பெயர்ப்பலகைகளில் எழுதுவதில் என்ன இலாபம் என்பது எனக்கு புரியாமலிருக்கின்றது. இதிலென்ன விளம்பர, வியாபார உத்தியுள்ளது? ஏதாவது புரிகின்றதா? எம்மொழியில் இல்லாத ஒன்றிற்குப் பொருத்தமான சொல்லை உருவாக்குவது பொருத்தமானது. மண்வெட்டி என்னும் தமிழ்ச்சொல் ஆங்கில அகராதிகளில் பயன்படுத்துவைதைப்போல சில சொற்களை உருவாக்கலாம். ஆனால் தமிழில் போதுமான கலைச்சொற்கள் உள்ளன.

இலத்திரனியல் ஊடகங்கள், பதிவு ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சி, திரைப்படம், சிற்றலை போன்றவை மக்களை இலகுவாக சென்றடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள். ஆனால் இவையே மொழியழிவின் மிகப்பெரிய பொறுப்பான வாரிசுகளாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. தமது மொழியில் இல்லாத சுவை வேறு எதிலிருக்கும் தமிழனுக்கு! ஊடகங்கள் என்ன தான் விளக்கங்களை கூறினாலும் தமது சமூக பொறுப்பைப்பற்றி கவலைப்படாமல் பணம், வியாபாரம், விளம்பரம் என்ற ஒரே நோக்கத்தில் சமூகத்தினுடைய மொழியை அழிக்கும் உரிமையை எடுத்து சரியாக செய்கின்றனர் என்றால் மிகையாகாது.

போதாக்குறைக்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து காசு கிடைக்கின்றது என்பதற்காக, பாடல்களிலே படைப்புக்களிலே ஆங்கிலத்தை கலக்கவிட்டு அதற்கு பரிசு கொடுத்து கைதட்டி மகிழ்கின்றார்கள். கவிஞர் தாமரை போல சிலர் தனித்து நின்றாலும், இவர்களுக்கு எதிர்புலத்தில் மொழியை வியாபார பார்வையில் பார்க்கும் புலமையாளர் பெருவெள்ளத்தின் முன், மொழி அழிவு சாதாரணமாக நடக்கின்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் நாட்டில் பெரியோர்கள், புலவர்கள் என எத்தனையோ பேர் சுமந்து, கட்டிக்காத்து வந்த மொழி சிதைக்கப்படுவதற்கு, அந்நியமொழிக் கவர்ச்சியில் கட்டுண்டு இருக்கும் பொறுப்பற்ற மொழியின் மைந்தர்கள் எடுத்தியம்பும் காரணங்களை கேட்டால் 'இதையறிந்தா தமிழ் புனைந்தோம்' என அதிர்ச்சியில் உறைந்திருப்பார். முன்னோர்கள் கட்டிக்காத்து வந்த நல்சுவைத்தமிழை அடுத்த சந்ததிக்கு சரியாக தாங்கி கொடுப்பர்களா! இந்த நவீன வியாக்கியானக்காரர்கள்?

அண்மையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முத்தமிழ்காவலர் கலைஞர் அவர்கள் 'திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புத் தொகுதியென்றைக் கட்டிக்கொடுக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த குடியிருப்புத்தொகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிலரிடம் நான் வினவியபோது சித்திரபுரி என்று பெயர் வைக்கலாம் என்று கூறினர். சித்திரம் என்பது வடமொழி சொல். சித்திரம் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் "ஓவியம்" எனவே "ஓவியபுரி' என்று பெயர்வைக்கலாம் என பரிந்துரைக்கின்றேன்' என்றார். நல்ல விடயம் முத்தமிழ் அறிஞரே வடமொழிக்கலப்பை விரும்பாத நீங்கள் ஆங்கிலக்கலப்பைப்பற்றியும் சிறிது கவனம் செலுத்தலாமே! ஆங்கிலக்கலப்பால் சிதைவடைந்து கொண்டிருக்கும் செந்தமிழை காப்பாற்ற, ஏன் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை? குழந்தைக்கு நோய் ஏற்படும் போது மருந்து கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் மருந்தை தாங்களாகவே உட்கொள்வர். பெரும்பான்மையான குழந்தைகள் மருந்தை இலகுவாக உட்கொள்ளமாட்டார்கள் சில பெற்றோர் இனிப்புடன் சேர்த்து கொடுப்பார்கள். பலர் வற்புறுத்தி கொடுப்பார்கள். இறுதியாக பெற்றோர் எப்படியாவது மருந்தை கொடுத்துவிடுவர்கள். ஏனெனில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தன் குழந்தையாதலால். அது போலத்தான் தமிழும்.

தமிழ்மொழியில் பெயர்வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு வழங்குவதில் உள்ள அக்கறையுடன் (படைப்புகளில் தமிங்கில சொற்களை பயன்படுத்தினால் கூடுதல் வரி அறவிடப்படும் என்றும் சட்டம் இயற்றலாம்) தமிழ் மொழியில் ஆங்கிலக்கலப்பை தடுக்க உங்களது புலமையை, செல்வாக்கை, அதிகாரத்தை பாவித்து, சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி, மொழியழிவை காப்பாற்றலாமே? என்று முத்தமிழ் அறிஞரும் செந்தமிழ் காவலரும் தமிழகத் தலைவருமான கலைஞரை நோக்கி கேள்வி கேட்க தோன்றுகின்றது.

தமிழின் உற்பத்தியிடம் தமிழ்நாடு. மொழி, படைப்புகள் ரீதியாக உலகத்தமிழ் மக்களை ஆளுமைசெய்வது தமிழ்நாடு. எனவே தங்களின் பொறுப்புணர்வை அலட்சியம் செய்யாமல் தமிழை காக்கும் தார்மீக பொறுப்பையுணர்ந்து செயற்பட்டால் தமிழ் தமிங்கிலமாவதை தடுக்கலாம். கலைஞரே நீங்கள் தான் முத்தமிழ்காவலர், தமிழை செம்மொழியாக்கியவர். ஆனால் நடைமுறையில் மக்களுக்கு இலகுவில் சென்றடையும் அடிப்படையான விடயங்களில் தமிழ் வழக்கொழிந்து போகின்றது. மாற்றங்களை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். உங்கள் காலத்திற்குப்பின் மொழிப்பற்றுடன் மொழியறிவுடன் யாரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமாட்டார்கள். அப்படியொருவர் வந்தால் அப்போது தமிழ் மொழி இருக்குமா? என்பது சந்தேகமே. தமிழ் வளர்ச்சிக்குப் பலகாரியங்களைச் செய்த நீங்கள் மொழிக்கலப்பைத் தடுக்க, மொழிக்கலப்பின் ஆணிவேர்களை அறுத்து, விழிப்புணர்வு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளினூடாக தமிழைக்காப்பாற்ற முயற்சியெடுத்தாலே அன்றி உங்களுக்குப் பிற்பட்ட காலத்தில் எதுவும் பெரியளவில் நடக்காது. இதைச்செய்வீர்களானால் உங்களின் மிகப்பெரிய சாதனையாக உலகத்தமிழர்களால் உலகமுள்ளவரை நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்.

Monday, October 12, 2009

ரஜினியின் ஆன்மீகப்பாதை


தமிழ்நாட்டின் சுப்பர் ஸ்டார் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்,பணம், புகழ், செல்வாக்கு போன்ற எல்லாவற்றைப் பெற்றிருந்தும், இமயமலையில் உள்ள பாபாவின் குகைக்கு கடினமான பாதையில் பயணித்து, அமைதியான தியானம் செய்கின்றார் என்பதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் என்ன?

ஆண்டவனை அடைய வேண்டுமானால், முதலில் பணம், புகழ், செல்வாக்கு போன்ற நிலையற்ற இச்சைகளில் இருந்து விடுபட்டு இறைவனை நோக்கி தியானம் செய்தல் வேண்டும். ஆனால் பணமே மையப்பொருளாகிவிட்ட இந்த உலகத்தில் எவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கலாம் என்ற ஒரே நோக்கத்தில், அநியாயங்களையும் பித்தலாட்டங்களையும் ஏமாற்று வேலைகளையும் இன்றைய மனிதன் செய்து கொண்டிருக்கின்றான். உயிர்காக்கும் மருத்துவத்துறையிலிருந்து கல்வித்துறை வரை எல்லாவற்றிலும் பணம். பணம் மட்டுமே இலக்காகக் கொள்ளப்படுவதால் எவ்வளவு பேர் சிரமப்படுகின்றார்கள். மனிதாபிமானம் செத்து பண அபிமானம் மேலோங்கிச் செல்கின்றது. இதனால் தானோ என்னவோ 'கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஐமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஐமானன் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துவிடு' என்பனூடாக பணம் எஐமானன் ஆனால் மனிதம் செத்துவிடும் தத்துவத்தைச் சொல்லியிருக்கின்றார்.

எளிமை, கருணை, ஆன்மீகம் போன்றவற்றின் தற்கால வாழும் உதாரணம் ரஜினி. அவரிடம் எவ்வளவோ வசதிவாய்ப்புகளிருந்தும் பாபா குகையை நோக்கி ஒரு சாதாரண மனிதனாக, ஆபத்துகள் நிறைந்த பாதையில் செல்லும் காட்சியைப் பார்க்கும் போது பிரமிப்பாகவே இருக்கின்றது. 'வாழ்க்கை என்பது இதுதான்' என்பதை இயல்பாக எடுத்துக்காட்டும் ஒரு வாழும் உதாரண புருசனாக, ஏன் இச்சமூகத்திற்கு நல்லவிடயங்களை சொல்ல வந்த அவதாரமாகவோ, ஆட்கொள்ளப்பட்ட மனிதனாகவோ ரஜினி தெரிகின்றார். ஆன்மீகச் சிந்தனைவாதியாகவும் தீர்க்கதரிசியாகவும் மட்டுமல்லாமல் பல்லாயிரம் மக்களை குறிப்பாக இளைஞர்களைக் கவரக்கூடிய தெய்வீகசக்தியுள்ள அவரை ஒரு வகையில் 'ரஜினிபாபா' என்றே அழைக்க தோன்றுகின்றது.

எளிமையான மனிதரான ரஜினியின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றிய விவாதங்களுக்கு அப்பால், மனித வாழ்வியல் தத்துவங்களின் அடிப்படையில் நோக்கும் போது , ஆசைகளிலிருந்து விடுபட்ட ஆன்மீகம்தான் வாழ்வின் நிறைவு. இவரைப்போல வாழும் உதாரணபுருசர்கள் வாழும் காலத்தில் அவர்களின் கருத்தை உள்வாங்கி, பின்பற்றி மனிதநேயம் மிக்கவர்களாக மட்டுமல்லாமல், செல்வாக்கினாலும் அதிகாரத்தினாலும் அடுத்தவர்களின் வாழ்வைச் சிதைத்து பாவங்களைச் செய்யாமல் குறைந்தது மனிதனாகவாவது வாழ வேண்டும். எல்லோரையும் மதித்து, அன்புசெலுத்தி மனிதம் தழைத்தோங்கச் செய்யவேண்டும் என்பதே ரஜினியின் பயணம் சொல்லித்தரும் வாழ்வியல் செய்திகள்.

Wednesday, September 30, 2009

நயன்தாராவுக்கு ஆதரவுக்குரல்


சில நாட்களாக எந்த செய்தி இணையத்தைத் திறந்தாலும் நயன்தாரா - பிரபுதேவா காதல், திருமணம் தொடர்பான செய்திகளே முதலிடத்தை பிடித்திருந்தன. இதில் எனக்கு என்ன பிரச்சினை என்று நினைக்கலாம். சத்தியமா ஒண்ணுமேயில்லை. காதல், கலியாணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இன்னொருத்தியைக் காதலிப்பது என்பது குடும்ப பிரச்சினை. இதில நாங்க மண்டையை உடைக்க ஒண்ணுமேயில்லை. ஆனால் இவர்களது காதல் பிரச்சினையில் மாதர்சங்கங்கள் நயன் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் முற்றுகைப் போராட்டம் செய்யப்போவதாக வந்த செய்தியில் தான் எனக்கு நிறைய கேள்விகள் (உட்கார்ந்து யோசிக்கவுமில்லை, ரூம் போட்டு யோசிக்கவுமில்லை) அதுவா வருது.

ஏதோ தேசிய பிரச்சினை போல இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நானும் அதுபற்றி பெரிய ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று நினைத்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். அது எப்படியான காதலாக இருந்துவிட்டுப்போகட்டும். என்னுடைய நோக்கம் எல்லாம் இதனூடாக மாதர்சங்கங்களின் சில செயற்பாடுகளை விளங்கிக்கொள்வதுதான்.

பெண்கள் மேம்பாட்டிற்காகப் பெண்களால் அமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்புக்கள்தான் மாதர்சங்கங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதற்காக குரல் கொடுக்க பெண்கள் முன்வந்துள்ளது நல்ல விடயம், வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தியேட்டர் வரை வந்துள்ள அவர்களின் போராட்ட வடிவம்தான் ஒரு தப்பான உதாரணத்திற்கு முன்னோடியாகப் போகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது.

இருவர்மீதும் சொல்லப்படும் செய்திக்கு, ஏன் நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்ல வேண்டும். ஒருவருக்கு மட்டும் ஏன் தண்டனை. பிரபுதேவாவும்; ஒரு நடிகர்தானே! அவரது படங்களைத் தடை செய்ய போராட முடியாதா? அல்லது அவருக்கெதிராக போராட்டம் செய்ய முடியாதா? இதன் மூலம், ஒரு ஆண் குற்றம் செய்யலாம், பெண்ணுக்கு மட்டும்தான் வரைமுறைகள் என்று! மாதருக்காக குரல் கொடுக்கும் இந்த மாதர்சங்கங்கள் சொல்லுகின்றனவா?? அப்படி வரையறுக்க முடியுமா! இது ஒரு அநீதிக்கெதிரான போராட்டம் என்றால். மீண்டும் அவ்வாறான ஒரு தப்பு நடக்கக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக அமையவேண்டாமா? இதற்கு பெண்ணியம், பெண்நவீனத்துவம் பற்றி பேசும் மாதர்சங்கங்கள் என்ன சொல்லப்போகின்றன?

ஏதோ வீட்டில் அடக்கமாக, அப்பாவியாகவிருந்த பிரபுதேவாவை, நயன்தாரா சொக்குப்பொடி போட்டு வைத்திருப்பது போலவும், வாயில விரலை வைச்சா கடிக்கத்தெரியாத அப்பாவியை விடுவிக்க போராடுவது போலவும் இருக்கிறது இவர்களது போராட்டம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிப் பெண்தான் சிந்திக்க வேண்டும் என்றால், மனைவி மீது அந்த மனிதருக்கு இல்லாத அக்கறை, எங்கோ இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஏன் வரவேண்டும்?? ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னால் சீரழிக்கப்படுகின்றது என ஒரு பெண் சிந்திக்க வேண்டும் என்பதுபோல, தன்னால் இரண்டு பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படுகின்றது என்பதை ஏன் அந்த ஆண் சிந்திக்கக் கூடாது?. மாதர்சங்கங்களின் அடிப்படைக் கோட்பாடுதான் என்ன? நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்லி, உங்கள் போராட்டம் வெற்றி பெற்று குடும்பத்தை இணைத்து வைத்த பின்னா, மீண்டும் ஒரு பெண்ணுடன் போக மாட்டார் என்று என்ன நிச்சயம்? அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், இதே போன்று போராட்டம் செய்வார்களா? நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல எந்தப் பிரச்சினையும் பார்க்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரேயொரு ஆதங்கம்தான் ஏன் இவர்களில் யாரும் பிரபுதேவாவை தப்பு செய்தவராகப் பார்க்கவில்லை?

காலம் காலமாக எமது காலச்சாரம் ஆண்மகனைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தில் மாதவி ஒதுக்கப்பட்டாளே தவிர, அவளைத் தேடிச்சென்ற கோவலன் அல்ல. நடக்கமுடியாத கணவனை விபச்சாரி வீட்டிற்கு சுமந்து சென்று விடுபவள் தான் கற்புக்கரசி என்பதும் எமது இலக்கியங்களில் கற்பிக்கப்பட்ட அற்புதம் (அசிங்கம்). அதே போல் சிவன் தொடங்கி முருகன், கிருஷ்ணர் வரை எந்தக் கடவுள்தான், ஒரு பெண்ணுடன் வாழவேண்டும் என்பதை கற்பித்துக் காட்டியிருக்கின்றது? எல்லோரும் வள்ளி திருமணத்தை கோயில்களில் விமர்சையாக கொண்டாடுகின்றோம், அதன் கருப்பொருள் பற்றிய விளக்கம் தெரியாததா என்ன! ஏன் அந்த மண்ணின் மாண்புமிகு முதல்வரே கால்மாட்டில் மனைவியும் தலைமாட்டில் துணைவியுமாகத்தானே காட்சி தருகிறார். (இப்பவே கண்ணைக்கட்டுதே! என்று அயர்ந்து விடாதீர்கள்)

மாதர்சங்கங்களின் கருத்துப்படி தமிழகத்தில் இதுவரை எந்தப்பெண்ணுக்கும் இப்படி ஒரு பிரச்சினை வந்ததேயில்லை. முதன்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்பது போல களத்தில் இறங்கியுள்ளன. கிராமத்தில் எண்பது சதவீதமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நான் சந்தித்த பெண்களில் பலர், 'மனசில புதைச்சு வைச்சிருக்கிறோமய்யா, என்ன செய்வது பலபேரு இதனால வாழக்கையே இழந்திட்டாங்க, இருந்தாலும் கடைசிகாலத்தில நம்மகிட்டதான் வருவாக' என்று பதிலளிக்கிறார்கள். மாதர்சங்கங்கள் பலமாகத்தானே இருக்கின்றன ஏதாவது செய்யலாமில்லையா? என்று கேட்டால், 'ஆம்பளை என்றால் அப்பிடித்தான் கொஞ்சம் அனுசரித்துப் போ' என்று ஆலோசனைதான் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் வராத அக்கறை, ஏன் இதில் மட்டும்?

தவறான வழிநடத்தல்களிலும், பிழையான கோட்பாடுகளிலும் சில மாதர்சங்கங்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். தமிழ்நாட்டில்; மாதர்சங்கம் என்பது ஒரு பலம் வாய்ந்த அமைப்பு, நியாயமான வழிநடத்தல் நிச்சயமாக 'பெண் மேம்பாடு' என்ற இலக்கை அடைய வைக்கும் அவர்கள் அரசியலுக்கும், அதிகாரத்துக்கும், பணத்திற்கும், புகழ்ச்சிக்கும் விலைபோகாத சந்தர்ப்பத்தில்.

இந்தப் பதிவை செய்துகொண்டிருக்கும் போது இன்றைய தினத்தந்தியில் 'கன்னியாகுமாரி பெண்ணைப் போல சென்னையிலும் இளம்பெண் கணவரின் மறுமணத்திற்கு எதிராக அவரது வீட்டின் முன்னால் பெற்றோருடன் போராட்டத்தில் குதித்தார்' என்ற செய்தி என்னைப்பார்த்து, நயனுக்கெதிராக என்றால் மட்டுமா! எனக் கேட்டது.

கொசுறு:

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா, எனக்குப் பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. என்றாலும் அவரின் இடையழகு படுசூப்பர்......! ம்..................ம் ஓவரா வழிஞ்சிட்டனோ!