Tuesday, October 20, 2009

முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ஒரு பகிரங்க வேண்டுகோள்...!

அதிகாலை வேளை, நகரத்து சலசலப்பு சந்தடியால் தூக்கத்திலிருந்து விழித்தேன். மனைவி தலைவலி மருந்து வாங்கிவரும்படி கேட்டாள். மருந்துக்கடையை தேடி, தமிழ் நாட்டின் தலைநகரின் சாலையோரம் நடந்து கொண்டிருந்தேன். புதிய இடம், புதிய மனிதர்கள், என்றாலும் என் மூதாதையர் வாழ்ந்த தமிழ்நாடு என்பதால் புதிய இடத்திலிருக்கும் உணர்வு ஏற்படவில்லை.


மருந்துக்கடையை தேடிய நான் கடைசியாக 'மெடிக்கல்ஸ் சாப்'பைச் சென்றடைந்தேன். கடையில் விற்பனையாளர் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடியதைக் கேட்க வியப்பாக இருந்தது. நான் வாங்கவேண்டிய மருந்துக்கு கொடுக்க வேண்டிய பணம் பத்து ரூபா. என்னிடமிருந்ததோ நூறு ரூபா தாள்கள், எனவே நூறு ரூபா தாளை மாற்ற முடியுமா? என விற்பனையாளரிடம் கேட்டேன். என்னை விழித்துப் பார்த்த அவர் 'நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியல்லை சார் ' என்ன 'லாங்குவிச்' பேசுறிங்க? தமிழ் தெரியாதா? என்றார், எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என்றாலும் பொறுமையாக ஆங்கிலத்தில் Do you have 100 rupees change? என கேட்டேன். எனைப்பார்த்து ஏளனமாக சிரித்த அவர் 'கன்றட் றுப்பீஸ் சேஞ்ச் என (f)பெஸ்டே தமிழ்ல கேட்டிருக்கலாமே! சார்' என்றார். அந்நிய மொழியின் ஊடுருவலின் தாக்கம் எந்தளவு தமிழை சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்கின்றது என்பதை நடைமுறையிலுணர்ந்தேன்.

'வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்ற பெருமைகொண்ட நாடு. மனிதர்களை வாழவைப்பது மனிதாபிமானம். ஆனால் தனது மொழியின் சுவையை, அதன் அழகை மறந்து, (கேவலமாக எண்ணி) மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பது போல வெள்ளையனிடமிருந்து வந்த ஆங்கிலத்தையும் கலந்து பேசுவது ஏன்? ஏன் மொழிப்பற்று விட்டுப்போயிற்று?

நான் ஆங்கில மொழியை எதிர்ப்பவனல்ல. நவீன தொழில்நுட்பம், வியாபாரம், சர்வதேச தொடர்பாடல், மேற்கல்வி போன்று பல விடயங்களுக்கு ஆங்கிலம் அவசியம். ஆனால் எமது மொழி மக்களிடம் எம்மொழியில் மட்டும் பேச வேண்டும். எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் மட்டுமே பேச வேண்டும். எமது மொழியை அழியவிடக்கூடாது என்பதே எனது கோட்பாடு. எதில் கலப்படம் வந்தாலும் அழிவு அழிவு தான். அப்படியாயின் மொழி அழிந்து விடுமா? என எனக்குள் ஒரு கேள்வியெழுந்தது.

பலவேறு நாடுகளில் மொழியை பாதுகாத்து, உலக விடயங்களையும் அறிவையும் உள்வாங்கி தமது மொழி அழியவிடாமலிருக்கும் மொழிப்பற்றை பல நாட்டு மக்களிடம் பார்த்துள்ளேன். உலகமயமாக்கலுக்குள்ளும் அடிபட்டுப்போகாமல் தங்களது தனித்துவத்தை போற்றி மொழியை பாதுகாத்து வளர்க்கும் அக்கறையுடன் பலவேறு மொழி பேசும் மக்கள் மத்தியில் செம்மொழி மைந்தர்களிற்கு ஏன் இந்த அலட்சியம்?.

மொழி அழிவின் வேகத்தை எடுத்தியம்பி நிற்பவை வியாபாரநிலையங்களின் 'தமிங்கில' பெயர்ப்பலகைகள். விற்பனை நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் மொழி தெரியாதவர்கள் படிப்பார்கள், ஆனால் நல்ல தமிழ்ப்பெயர்கள் இருக்கும் போது, ஆங்கில சொல்லின் தமிழ் உச்சரிப்பில், புதிய தமிழற்ற சொற்களை பெயர்ப்பலகைகளில் எழுதுவதில் என்ன இலாபம் என்பது எனக்கு புரியாமலிருக்கின்றது. இதிலென்ன விளம்பர, வியாபார உத்தியுள்ளது? ஏதாவது புரிகின்றதா? எம்மொழியில் இல்லாத ஒன்றிற்குப் பொருத்தமான சொல்லை உருவாக்குவது பொருத்தமானது. மண்வெட்டி என்னும் தமிழ்ச்சொல் ஆங்கில அகராதிகளில் பயன்படுத்துவைதைப்போல சில சொற்களை உருவாக்கலாம். ஆனால் தமிழில் போதுமான கலைச்சொற்கள் உள்ளன.

இலத்திரனியல் ஊடகங்கள், பதிவு ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சி, திரைப்படம், சிற்றலை போன்றவை மக்களை இலகுவாக சென்றடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள். ஆனால் இவையே மொழியழிவின் மிகப்பெரிய பொறுப்பான வாரிசுகளாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. தமது மொழியில் இல்லாத சுவை வேறு எதிலிருக்கும் தமிழனுக்கு! ஊடகங்கள் என்ன தான் விளக்கங்களை கூறினாலும் தமது சமூக பொறுப்பைப்பற்றி கவலைப்படாமல் பணம், வியாபாரம், விளம்பரம் என்ற ஒரே நோக்கத்தில் சமூகத்தினுடைய மொழியை அழிக்கும் உரிமையை எடுத்து சரியாக செய்கின்றனர் என்றால் மிகையாகாது.

போதாக்குறைக்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து காசு கிடைக்கின்றது என்பதற்காக, பாடல்களிலே படைப்புக்களிலே ஆங்கிலத்தை கலக்கவிட்டு அதற்கு பரிசு கொடுத்து கைதட்டி மகிழ்கின்றார்கள். கவிஞர் தாமரை போல சிலர் தனித்து நின்றாலும், இவர்களுக்கு எதிர்புலத்தில் மொழியை வியாபார பார்வையில் பார்க்கும் புலமையாளர் பெருவெள்ளத்தின் முன், மொழி அழிவு சாதாரணமாக நடக்கின்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் நாட்டில் பெரியோர்கள், புலவர்கள் என எத்தனையோ பேர் சுமந்து, கட்டிக்காத்து வந்த மொழி சிதைக்கப்படுவதற்கு, அந்நியமொழிக் கவர்ச்சியில் கட்டுண்டு இருக்கும் பொறுப்பற்ற மொழியின் மைந்தர்கள் எடுத்தியம்பும் காரணங்களை கேட்டால் 'இதையறிந்தா தமிழ் புனைந்தோம்' என அதிர்ச்சியில் உறைந்திருப்பார். முன்னோர்கள் கட்டிக்காத்து வந்த நல்சுவைத்தமிழை அடுத்த சந்ததிக்கு சரியாக தாங்கி கொடுப்பர்களா! இந்த நவீன வியாக்கியானக்காரர்கள்?

அண்மையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முத்தமிழ்காவலர் கலைஞர் அவர்கள் 'திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புத் தொகுதியென்றைக் கட்டிக்கொடுக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த குடியிருப்புத்தொகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிலரிடம் நான் வினவியபோது சித்திரபுரி என்று பெயர் வைக்கலாம் என்று கூறினர். சித்திரம் என்பது வடமொழி சொல். சித்திரம் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் "ஓவியம்" எனவே "ஓவியபுரி' என்று பெயர்வைக்கலாம் என பரிந்துரைக்கின்றேன்' என்றார். நல்ல விடயம் முத்தமிழ் அறிஞரே வடமொழிக்கலப்பை விரும்பாத நீங்கள் ஆங்கிலக்கலப்பைப்பற்றியும் சிறிது கவனம் செலுத்தலாமே! ஆங்கிலக்கலப்பால் சிதைவடைந்து கொண்டிருக்கும் செந்தமிழை காப்பாற்ற, ஏன் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை? குழந்தைக்கு நோய் ஏற்படும் போது மருந்து கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் மருந்தை தாங்களாகவே உட்கொள்வர். பெரும்பான்மையான குழந்தைகள் மருந்தை இலகுவாக உட்கொள்ளமாட்டார்கள் சில பெற்றோர் இனிப்புடன் சேர்த்து கொடுப்பார்கள். பலர் வற்புறுத்தி கொடுப்பார்கள். இறுதியாக பெற்றோர் எப்படியாவது மருந்தை கொடுத்துவிடுவர்கள். ஏனெனில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தன் குழந்தையாதலால். அது போலத்தான் தமிழும்.

தமிழ்மொழியில் பெயர்வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு வழங்குவதில் உள்ள அக்கறையுடன் (படைப்புகளில் தமிங்கில சொற்களை பயன்படுத்தினால் கூடுதல் வரி அறவிடப்படும் என்றும் சட்டம் இயற்றலாம்) தமிழ் மொழியில் ஆங்கிலக்கலப்பை தடுக்க உங்களது புலமையை, செல்வாக்கை, அதிகாரத்தை பாவித்து, சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி, மொழியழிவை காப்பாற்றலாமே? என்று முத்தமிழ் அறிஞரும் செந்தமிழ் காவலரும் தமிழகத் தலைவருமான கலைஞரை நோக்கி கேள்வி கேட்க தோன்றுகின்றது.

தமிழின் உற்பத்தியிடம் தமிழ்நாடு. மொழி, படைப்புகள் ரீதியாக உலகத்தமிழ் மக்களை ஆளுமைசெய்வது தமிழ்நாடு. எனவே தங்களின் பொறுப்புணர்வை அலட்சியம் செய்யாமல் தமிழை காக்கும் தார்மீக பொறுப்பையுணர்ந்து செயற்பட்டால் தமிழ் தமிங்கிலமாவதை தடுக்கலாம். கலைஞரே நீங்கள் தான் முத்தமிழ்காவலர், தமிழை செம்மொழியாக்கியவர். ஆனால் நடைமுறையில் மக்களுக்கு இலகுவில் சென்றடையும் அடிப்படையான விடயங்களில் தமிழ் வழக்கொழிந்து போகின்றது. மாற்றங்களை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். உங்கள் காலத்திற்குப்பின் மொழிப்பற்றுடன் மொழியறிவுடன் யாரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமாட்டார்கள். அப்படியொருவர் வந்தால் அப்போது தமிழ் மொழி இருக்குமா? என்பது சந்தேகமே. தமிழ் வளர்ச்சிக்குப் பலகாரியங்களைச் செய்த நீங்கள் மொழிக்கலப்பைத் தடுக்க, மொழிக்கலப்பின் ஆணிவேர்களை அறுத்து, விழிப்புணர்வு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளினூடாக தமிழைக்காப்பாற்ற முயற்சியெடுத்தாலே அன்றி உங்களுக்குப் பிற்பட்ட காலத்தில் எதுவும் பெரியளவில் நடக்காது. இதைச்செய்வீர்களானால் உங்களின் மிகப்பெரிய சாதனையாக உலகத்தமிழர்களால் உலகமுள்ளவரை நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்.

2 comments:

கிடுகுவேலி said...

ஆழமான பார்வை...ஆதங்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இந்த விடயத்தில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். என்னால் தொடர்பாடல்களில் ஆங்கிலம் கொண்டு சரளமாக உரையாட முடியும் என நினைத்து கொண்டால், எழுத முடியும் என நினைத்துக் கொண்டால் அவர்கள் தமிழை வளர்க்கப் பாடு பட வேண்டும். எமது தமிழை நாம் பாதுகாக்கவில்லை என்றால் எவனும் வர மாட்டான். தமிழினக் காவலன்(?)கலைஞர் தாத்தா மட்டுமல்ல அனைவரும் சிந்திக்க வேண்டும். நல்லதொரு சிந்தனையும் ஆலோசனையும். தொடரட்டும்.

விரும்பி said...

வணக்கம் கதியால்

////எமது தமிழை நாம் பாதுகாக்கவில்லை என்றால் எவனும் வர மாட்டான். தமிழினக் காவலன்(?)கலைஞர் தாத்தா மட்டுமல்ல அனைவரும் சிந்திக்க வேண்டும்./////

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்