Sunday, October 4, 2009

காதலும்.........புரிதலும் - எனது பார்வையில்


இளம்பிராயத்தினர்களுக்கு சுரக்கும் ஓமோன்களின் வெளிப்பாடுதான் காதல் என விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்படுகின்றது. என்றாலும் வாழ்வதற்காக தனக்கு வேண்டிய துணையை தெரிவு செய்வதற்கு காதல் முக்கிய ஊடகமாக இருக்கின்றது என்பது உண்மை.

புரிந்துணர்வின் அடிப்படையில் காதல் வருவதாயின் பெரும்பாலாக வயது, சமூக அறிவு, அனுபவ முதிர்ச்சியின் பின் உருவாவது சாத்தியப்படலாம், இது மிகக்குறைவு. ஆனால் ஓமோன்களின் செயற்பாட்டின் பக்கவிளைவு என்று கூறப்படும் காதல்கள் தான் நடைமுறையில் கூடுதலானவை. அநேகமாக பல காதல் வாழ்க்கைகளின் உருவாக்கப்புள்ளி இதுதான். இத்தளத்தில் அமையும் காதலும் வாழ்க்கையும் பொதுவாகப் புரிதலின் அடிபபடையின்மையால் சிக்கலான முடிவை நோக்கி செல்பவை, அல்லது தவிர்க்க முடியாமல் தொடரப்பட்டுக்கொண்டிருப்பவை.

காதல் வயப்பட்டகாலத்தில் மலையைக்கூடப் புரட்டிக்கொண்டு வந்து கொடுக்கலாம், உலகமே எதிர்த்தாலும் வென்று காட்டலாம், என்றெல்லாம் தோன்றும். மைய சிந்தனைப்புள்ளியாக காதலே பிரதானப்பட்டிருக்கும் போது ஆலோசனைகள் அலட்டல்களாக தெரியும். நண்பர்களிடம் பெருமையாக 'எங்களுக்கு எல்லாவிடயங்களிலும் அந்தமாதிரி ஒத்துப்போகுது' சொல்லமுடியும். இவ்வாறு பற்பல வியாக்கியானங்களை உதிர்க்க இயலும். (தற்போது நினைக்கும்போதுதான் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கின்றேன் என தோன்றும்). உச்சமாக அவளுக்காக சாகலாம் என்றும் கூட தேன்றும். சிலர் காதல் தோல்வியால் தம் உடலைக் காயப்படுத்துவது, தற்கொலை செய்யமுனைவது உட்பட பல மோசமான செயற்பாடுகளிலும் இறங்குவார்கள்.

காதல் மயக்கத்தில் கதைக்கும் விடயங்கள், விருப்பு வெறுப்பு தொடர்பான கருத்தொற்றுமை, சொல்லப்படும் வாக்குறுதிகள், வாழ்தல் தொடர்பான கற்பனை விவாதங்கள், திட்டமிடல்கள் வாழ்க்கையிலும் தொடரும் என நினைக்கும் இருபாலாரும் அதைப் பலமாக நம்பி கற்பனையை வளர்த்துக் கொள்வார்கள். முக்கியமாக பெண்கள், எப்பவும் அன்பாக இருப்பீர்களா! இதேபோலவே கடைசிவரை கதைத்துக்கொண்டிருப்பீர்களா! என்னை வைத்து காப்பாற்றுவீர்களா! போன்ற கேள்விகளை எழுப்புவார்கள், ஏனெனில் தனித்துவமாகத் தீர்மானம் எடுக்கும் போது, பெற்றோரிடமிருந்து கிடைத்த பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களும் கிடைக்குமா? என்பதை உணர முற்படுவார்கள். பெண் அநேகமாக சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்டவள் என்பதால் எதிர்காலம் தொடர்பான பயத்தில் இவற்றை உறுதிப்படுத்த முனைவாள். அநேகமான ஆண்கள் சாதகமான பதிலைத்தான் கூறமுடியும். இதற்கு கூறப்படும் பதில்கள் பெரும்பான்மையாக நிஐமல்ல.

அன்பின் புரிதல் காதல்
காதலில் புரிதல் மயக்கம்
வாழ்க்கையில் புரிதல் தெளிவு
புரிதலின் தெளிவு நிறைவான காதலாகும்
வாழ்க்கையின் புரிதலில் ஆதிக்கம் செலுத்துவது நிஐ உணர்வுகள்

காதலின் போது அன்பும் காமமும் நிரம்பியிருக்கும் அக்காலத்தில் வாழ்க்கையை புரிந்து விட்டோம் வாழ்க்கையை வெல்வோம் என நம்புவதும் வாழ்க்கையின் புரிதலல்ல. வாழ்க்கையில் புரிதல் என்பது கருத்து ஒற்றுமை, பழக்கவழக்கம், விட்டுக்கொடுத்தல், விருப்புவெறுப்பு போன்ற பல அடிப்படை அம்சங்களின் உடன்பாட்டின் அடிப்படையில் உருவாகும் நேசம். அதுவே நிஐமாகும். குறிப்பாக இரண்டு வேறுபட்ட சிந்தனை, கருத்து, பழக்கவழக்கமுள்ள குடும்ப பின்தளங்களிலிருந்து இணையும் போது, வாழ்கைத் தீர்மானத்தில் அப்பதிவுகளும் ஆதிக்கம் செலுத்தும். இவைகளிலிருந்து விடுபட்டுத் தங்களுக்குள் ஒரு தெளிவு பெறுதலே முழுமையான புரிதல் ஆகும். காதலில் புரிதல் என்பது முழு வாழ்க்கைக்கும் பொருந்துமென்று நினைப்பது பொருத்தமானதல்ல. வாழ்க்கையில் புரிதலே நிறைவான வாழ்க்கையின், காதலின் வெளிப்பாடு.

எனவே காதலின் புரிதல் என்பது வாழ்க்கையின் புரிதலிலேயே முழுமை பெறும். இதுவே நிலையான காதலுக்கும், சந்தோஷமான வாழ்க்கைக்குமான அடிப்படையாக அமைகின்றது.

10 comments:

வனம் said...

வணக்கம்

\\புரிந்துணர்வின் அடிப்படையில் காதல் வருவதாயின் பெரும்பாலாக வயது, சமூக அறிவு, அனுபவ முதிர்ச்சியின் பின் உருவாவது சாத்தியப்படலாம், \\
ஆனால் இம்மாதிரியான புரிதல் வரும்வரை நம் சமூகம் அவர்களை விட்டுவைப்பதில்லை.

எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் நடக்கும் திருமணத்திற்கு இனி விட்டால் இவர்கள் சொந்தமாக யொசித்துவிடுவார்கள் என்பதும் ஒரு காரணி

எனவே இந்திய தமிழ் சமூகம் புரிதல் நிறைந்த மன மற்றும் மண இணைப்பை விரும்புவதில்லை. நம் பெரியவர்களூக்கு தேவை அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, செய்வதற்கு ஒரு ஆள் அவ்வளவே

இராஜராஜன்

ரவி said...

அற்புதமாக சொல்லியிருக்கீங்க...!!!

அபிஷேகா said...

இராஐராஐன் அவர்களே!

//இந்திய தமிழ் சமூகம் புரிதல் நிறைந்த மன மற்றும் மண இணைப்பை விரும்புவதில்லை. நம் பெரியவர்களூக்கு தேவை அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, செய்வதற்கு ஒரு ஆள் அவ்வளவே//

அருமையான கருத்துக்கள்

காலமாற்றத்தில் சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையில்

மிக்க மிக்க நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துகளிற்கும்

அபிஷேகா said...

செந்தழல் ரவி அவர்களே

//அற்புதமாக சொல்லியிருக்கீங்க//

நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துகளிற்கும்

கிடுகுவேலி said...

வித்தியாசமான ஒரு சிந்தனையும் பார்வையும். எல்லோருக்கும் காதல் பிடிக்கிறது. ஆனால் அதனை ஆராய்வதில்லை. அதனை ஆழமாக பார்த்திருக்கிறீர்கள். தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!!

அபிஷேகா said...

கதியால் அவர்களே

//வித்தியாசமான ஒரு சிந்தனையும் பார்வையும். எல்லோருக்கும் காதல் பிடிக்கிறது. ஆனால் அதனை ஆராய்வதில்லை. அதனை ஆழமாக பார்த்திருக்கிறீர்கள்//

புரிதலின் ஆழம் தெளிவான வாழ்க்கைக்கு வழிவகும் என்பதால் ஒரு சிறு முயற்சி

நன்றி

முல்லைப்பிளவான் said...

உண்மையான காதல்ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுமாக இருந்தால் அது அவர்களை எல்லா விடயங்களில் புரிதலையும் விட்டுக்கொடுப்புகளையும் எற்படுத்தும் மாறாக காமம் சார்ந்த காதல் அவர்களுக்கிடையில் ஏற்படுமாக இருந்தால் அல்லது மற்றவர்கள் காதிக்கிறார்கள் என்பதற்காகவும் நேரம் கழிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் காதல்களே தோல்வியடைகின்றன்.
உண்மை காதல் தனாக இருவரிடமும் உண்மையான புரிதலை தானாக ஏற்படுத்துட் என்பதே எனது வாதம். புரிந்து கொண்டு காதல் செய்யமுடியாது காதல் செய்வதன் ஊடாகத்தான் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்

க.பாலாசி said...

//வாழ்க்கையின் புரிதலில் ஆதிக்கம் செலுத்துவது நிஐ உணர்வுகள்//

நிஜமான வார்த்தைகள்...

இன்றைய திருமணங்கள் விரைவில் முடிவதற்கு சரியான புரிதல் இல்லாமையே காரணம்.

நல்ல கருத்துள்ள பதிவு...

அபிஷேகா said...

முல்லைப்பிளவான் அவர்களே

//புரிந்து கொண்டு காதல் செய்யமுடியாது காதல் செய்வதன் ஊடாகத்தான் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்//

காதல் செய்வதனூடாக தான் புரிதல் வருமென்பது உண்மை ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல
காதலில் புரிதல் முழுமைபெறாது விதிவிலக்குகள் உள்ளன. கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேன்.இதில் வயதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

அபிஷேகா said...

க.பாலாஜி அவர்களே

//இன்றைய திருமணங்கள் விரைவில் முடிவதற்கு சரியான புரிதல் இல்லாமையே காரணம்//

சரியாக கருத்து

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி