Thursday, November 26, 2009

'பண்ணி'கள் படுத்தும்பாடு

என்னடா பண்ணி மேய்க்கிற பண்ணையில் மேலாளர் வேலைக்குச் சேர்ந்திட்டானோ? என்று நீங்கள் நினைக்கிறது புரியுது. ஆனால் அதுவல்ல இது. எங்களுடைய தாய்த்தமிழ் மொழியில் கூட்டம் கூட்டமாகப் புகுந்து குதறும் 'பண்ணிகள்' பற்றியது. யாரையோ திட்டப்போறான் என்று நினைக்கிறீங்கள். அதுவும் இல்லை.


சரி, இனி விடயத்திற்கு வருகின்றேன். அண்மையில் தூரத்து உறவினர் ஒருவர் இரவு விருந்திற்கு அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்திருந்தார். அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை ஆதலினால் போய்விட்டேன். நகரத்திலிருக்கும் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் வீட்டிற்குச் சென்ற என்னை அன்பாக வரவேற்று நீண்டகாலம் பழகியதைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள்.

நாங்களிருந்து பேசிக்கொண்டிருந்த வீட்டின் மைய அறையின் அருகேயிருந்த அறையில் அவர்களுடைய ஏழு வயது நிரம்பிய மகள் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு சென்ற அவளது அம்மா ' டர்ஷி எல்லாம் கரைக்டா றைட் பண்ணியிட்டியா? (சரியா எழுதியிட்டியா?) முதல்ல கொம்பிளீட்டா றீட் பண்ணிட்டு, (f)பர்பக்டா றைட் பண்ணுங்கோ. அப்படின்னா தான் (f)பெஸ்ட் ராங் கிடைக்கும்' என்று மகளை ஊக்கப்படுத்தினார். நவீன தமிங்கில வார்த்தைகள் சிரமமாகவிருந்தது புரிவதற்கு. மனதுக்குள்.... 'தமிழ் வளர்க' என்று நினைத்தேன்.

சமையல் முடித்ததும் மகளைக் கூப்பிட்டு 'றைட் பண்ணி முடிந்தால் வாங்கோ சீக்கிரம் ஈற் பண்ண வேணும் (அதுதாங்க சாப்பிடுவோம்). என்றார். மகளோ பாவம் தூக்க களைப்பில் சாப்பிட வந்து உட்கார்ந்த போது தாயார் கண்டிப்பாக ஈற் பண்ண முதல்ல கான்ட் வோஸ் பண்ண வேணும் ஓகேயா? சீக்கிரம் வோஸ் பண்ணிட்டு வா என்றார். எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்தோம். பின்னர் மகளிடம் 'பிறஸ் பண்ணிட்டு, பிறே பண்ணிட்டு போய் சீக்கிரம் சிலீப்பண்ணுங்கோ'. எனக்கூறி விட்டு என்னிடம் வந்தார். 'பிள்ளைகளுக்குச் சரியான தமிழ் பழக்க வேணும். ஆங்கிலம் பேச வைக்கக்கூடாது. நான் சரியான கண்டிப்பு, வீட்டில் தமிழ் மட்டும்தான் பேசுவேன்' என்று எனக்கும் தனது கொள்கையைத் தெளிவாக விளக்கினார். திருவள்ளுவருக்குப் பக்கத்தில கண்டிப்பாக உங்களுக்குச் சிலை வைக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவு தூரம், எமது மொழியை நாங்களே சிதைக்கின்றோம் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. ஆங்கில மொழிக்கலப்பு என்பது சர்வசாதரணமாகிவிட்டது. ஆங்கில மோகத்தின் விளைவால் பிறந்த 'தமிங்கிலம்' தான் நாங்கள் தத்தெடுத்து வைத்திருக்கும் நோய்பிடித்த குழந்தை. இதில் எத்தனையோ தப்புத்தாளங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் 'பண்ணி' எனும் சொல்லின் பிறப்பு. ஆங்கிலச் சொல்லை தமிழில் இணைக்கும் போது பண்ணி என்னும் சொல்லையும் சேர்த்தாலே பேச முடியும். இதன் உருவாக்கம் இப்படி தான் நடந்தது. ஆனால் வேண்டப்படாத இந்தப் பிறப்பு இன்று வேகமாக, ஆழமாக வேரூன்றி விட்டது என்பது மட்டும் உண்மை, பிரிக்க முடியாக ஒரு சொல்லாகத் தமிங்கிலத்தில் இணைத்துக்கொண்டு விட்டது இந்தப் 'பண்ணி'. சாதாரணமாக பண்ணி இன்றி தமிழுடன் ஆங்கிலம் பேச முடியாது.

ஒரு மொழி காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியடையும் இலகுபோக்கில் இருக்க வேண்டும். புதிய சொற்கள் வரவேற்கப்பட வேண்டும் அவை அர்த்தமுள்ளவையாக அமையும் போது. பண்ணி எனும் இச்சொல் தனித்து நின்று செயற்படக்கூடியது அல்ல. பொருள் நிறைந்த ஒரு சொல்லும் அல்ல. ஒரு வெற்றுச் சொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில வினைச்சொற்கள் தமிழில் வரும்போது 'பண்ணி' இல்லாமல் செயற்பட முடியாது. ஒரு வகையில் சொல்லப்போனால் ஆங்கில மொழியின் ஊடுருவலைத் தாங்கி நிற்கும் ஆங்கிலத்தமிழ் இணைப்புக்கானது இந்தச் சொல். ஒருமுறை இச்சொல்லின்றி ஆங்கில வினைச்சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள் பெரும்பான்மையாக முடியாது. இதனால் இதை 'விசக்களை'என்று வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது.

தமிழில் ஆழமாய் வேரூன்றி விட்ட இச்சொல் களையப்பட்டால், ஆங்கிலத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் வலுவிழக்கும். ஆனால் எப்படி சாத்தியமாக்குவது என்றுதான் தெரியவில்லை.

கொசுறு: நான் இந்தப் பண்ணி எல்லாம் உச்சரிக்கமாட்டன் என்றால் பாருங்கோ. இந்தப் பதிவை றைட் பண்ணிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம். உடனே பிறண்டுக்குப் போன் பண்ணி இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். அப்புறம் அதை வைச்சு கரக்ட் பண்ணி றிவியூ பண்ணிட்டு இன்ரநெற்றை ஓப்பின் பண்ணினால், அது வேர்க் பண்ணவில்லை. மீண்டும் றை பண்ணி பேஜ்ஜை றீபிறஸ் பண்ணிட்டு, அப்புறமா ஆட்டிக்கல ரைப் பண்ணினேன். ஒரு வழியாக புளொக்கில் அப்லோட் பண்ணி தமிழிஸ் இல் சப்மிற் பண்ணப்போனால்................ ஐயோடா சாமி. ஆளைவிடுங்க, நாட்டில இந்தப் பண்ணித் தொல்லை தாங்க முடியலைடா.

4 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

பண்ணிகள் பாடு கொண்டாட்டம் தான்!

செய்து? இங்க வராதா?

கழுவி என்பதை விட வாஷ் பண்ணறது எவ்வளவு சுத்தம் தெரியுமா?

நாற்றம் - வாசம் இரண்டைப் போல.

தேவன்மாயம் said...

அப்புறம் அதை வைச்சு கரக்ட் பண்ணி றிவியூ பண்ணிட்டு இன்ரநெற்றை ஓப்பின் பண்ணினால், அது வேர்க் பண்ணவில்லை. மீண்டும் றை பண்ணி பேஜ்ஜை றீபிறஸ் பண்ணிட்டு, அப்புறமா ஆட்டிக்கல ரைப் பண்ணினேன். ஒரு வழியாக புளொக்கில் அப்லோட் பண்ணி தமிழிஸ் இல் சப்மிற் பண்ணப்போனால்................ ஐயோடா சாமி. ஆளைவிடுங்க, நாட்டில இந்தப் பண்ணித் தொல்லை தாங்க முடியலைடா///

இது தொத்து வியாதி மாதிரிங்க!!விடாது!!

முல்லைப்பிளவான் said...

வணக்கம்.
பண்ணிகளின் தொல்லை கூடத்தன். இங்கு எல்லா பண்ணிகளும் சேர்ந்து தமிங்கலத்தை கறட் பண்ணிறாங்கள் தமிழை ஒருவாறு இல்லாது பண்ணிடுவாங்க. அப்புறம் இதுதானங்க தமிழ் என்று சொல்லுவாங்க. கவலைதான்.
ஆனா ஒன்று அரசின் சட்டங்கள், நடைமுறைகள். போன்றவற்றில் துயா தமிழ் உள்ளது. அதனை ஈட்டு சந்தோசம் அடையலாம். நடைமுறையில் கொண்டுவருவதற்கு இறுக்கமான கட்டுபாடுகள் தேவை அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது கவலை.
தமிழர்கள் ஆங்கிலத்தில் கொண்ட மோகந்தான் இதற்கு காரணம். அதனை எப்பதான் விடப்போறாங்க. அதுவும் பொன்னுங்க அதிக மோகம். அப்புறம் திருந்துவது. மிக மிக ரொம்ப ரொம்ப கடினம் தான் .

Anonymous said...

vera ennapanni intha probletha sovepannirathu
ethachum new word irunthal readypanni kudunga

Note:
I dont know tamil type writing.thatswhy i do the above panni mistake. But i like my TAMIL so much.
So, Please do the needfull.